ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   »   நன்மைகளின் களஞ்சியம் நல் ரமளான்


         நன்மைகளின் களஞ்சியம் நல் ரமளான்


                                                                                                                                    -அபூ பாஹிரா-


 

    மளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது      

                                                                                                                                                         (அல்குர்ஆன்) 

 

     ரமளான் என்றால் “சுட்டுக் கரிப்பது” என்று பொருள்.  இஸ்லாம் வருவதற்கு முன்னரே அறபு நாட்டில் இப்பெயர் இந்த மாதத்திற்கு இருந்து வந்தது. இருந்தாலும் இஸ்லாம் வந்தபின் இப்பெயர்பொருத்தமானதாக - பெயருக்கு உயிர் ஊட்டுவதாக அமைந்துவிட்டது.

    

    இம்மாதத்தில் மனிதர்கள் தொடர்ந்து செய்யும் நன்மைகளால்அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்கள் கரிந்து போகின்றன.

 

     அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாழ்வில் இம்மாதம் மறக்க முடியாத மாதம்.  ஏனெனில்இத்திங்களில் தான் அவர்களின் நபித்துவம் வெளியாக்கப்பட்டது.“இக்ரஃ! ஓதுங்கள்!”எனத் தொடங்கிய  குர்ஆன்­ஷரீஃபு  இத்திங்களில் தான் வஹீயாக இறங்கத் தொடங்கியது.  அதன் மூலம் இஸ்லாமும் அறிமுகம் பெற்றது. 


    அதுமட்டுமல்ல! இஸ்லாத்திற்கு முதலில் கிடைத்த வெற்றியும் இந்த ரமளான் மாதத்தில்தான்!  அது பதுறுப்போர்க்களத்தின் மூலம் பதிவானது!


    மேலும், ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த .“லைலத்துல்கத்ர்” இரவு அமைந்திருப்பதும் இந்த மாதத்தில்தான்.


    இந்த  மாதத்தை மனிதர்களுக்கு அறிமுகம் செய்யும்போது “குர்ஆன் அருளப்பட்ட மாதம்” என இறைவன் இதன்சிறப்பைக் கோடிட்டுக் காட்டுகிறான்.


    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  ரமளான்  மாதத்தை ரஜப் மாதத்திலிருந்தே எதிர்பார்த்து வரவேற்கத் தயாராகி விடுவார்கள்.


    நற்செயல்கள் நிறையச் செய்வதற்குரிய பருவகாலமாக (சீசன்) இதனைஆக்கி, இம்மாதத்தில் புரியும் அமல்களுக்கு,இறைவன் மற்ற நாட்களில் புரியும் வணக்கங்களைவிட எழுபது மடங்குபிரதிபலனை அதிகமாகத் தருகிறான்.


    சொர்க்கவாசல்கள் திறக்கப்பட்டு - அது அலங்கரிக்கப்பட்டு, நரகின் வாசல்கள் அடைக்கப்பட்டு -ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு - விண்ணுலகில் ஒரு பெரிய மாற்றமேஏற்படுத்தப்படுகிறது.

  

    11  மாதங்கள் பள்ளிவாசலின் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களைக் கூட பள்ளியை நோக்கி வரச் செய்துதங்களை மறுபரிசீலனை செய்து பாவமன்னிப்புக் கோரச் செய்து, திருந்தி நடக்கச் செய்யும் திருப்புமுனைமாதம் இதுதான்.


    உலகில் வாழ்ந்த எல்லா சமூகங்களையும் நோன்பு நோற்கச்செய்தாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தவர்க்கு விரதமிருப்பதை ஓர் ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்தித் தந்தான் இறைவன்.


    தராவீஹ் தொழுகை மூலம் இத்திங்களின் இரவுகளை இறைவன்அலங்கரித்திருக்கிறான்.


    இம்மாதத்தில் பூமி எங்கணும் பரந்துள்ள பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்களின் வீடுகளிலும் கோடிக்கணக்கான முறை குர்ஆன்ரீப் ஓதிமுடிக்கப்படுகிறது.  உலகில் வேறு எந்த சமயவேதங்களும் பெறாத அந்தஸ்தை  குர்ஆன்ரீப் பெற்றிருக்கிறது.


    ஜக்காத் எனும் ஏழைவரியினை அதிகமானோர் இந்த மாதத்தில் கணக்கிட்டுக் கொடுப்பதால் ஏழை மக்களின் வசந்த மாதமாகவும் இம்மாதம் திகழ்கிறது. 


    இந்த மாதத்தை அடைந்து பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு இறைவனின் பரிசு காத்திருக்கிறது. அலட்சியமாக - பொடுபோக்காக இருந்து பொழுதை வீணாகக்கழித்தவர்களுக்கு இறைவனின் தண்டனையும் காத்திருக்கிறது. 


    அல்லாஹ் நம் அனைவரையும் இத்திங்களை, அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கண்ணியப்படுத்தியது போல நாமும் கண்ணியப்படுத்த பாக்கியமளிப்பானாக! ஆமீன்!