ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   »  ​கலீபா பெருந்தகைகள்

தரீகத்துல் ஹக்கிய்யத்துல்காதிரிய்யாவின் கண்ணியமிகு


​கலீபா பெருந்தகைகள்

 

ஒரு சிறப்புப் பார்வை!

  மெளலவி என்.எஸ்.என். ஆலிம்.பி.காம்.திருச்சி

 

    லீஃபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், குத்புல் ஃபரீது ஜமாலியா ஸைய்யித் யாஸீன் மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உன்னத தாற்பரிய நிலையைக் குறித்து கூறிய ஒரு நிகழ்வு எனக்கு நினைவிற்கு வருகிறது.


அதற்கு முன் ஒரு முன்னோட்டம்:-


      ஹாஜீ கருத்தராவுத்தர் அவர்கள் கெளது நாயகம் (ரலி) அவர்களின் மீது அளப்பரிய அன்பும் பக்தியும் உடையவர்.  தனது மகன்களுக்கு குலாம் முஹிய்யுத்தீன், ஜமால் முஹிய்யுத்தீன், ஷேக் முஹிய்யுத்தீன்,காஜா முஹிய்யுத்தீன், சுல்தான் முஹிய்யுத்தீன்,தர்வேஸ் முஹிய்யுத்தீன் என்பதாகப் பெயரிட்டு அழகு பார்த்தவர். மேலும் ஹாஜீ கருத்த ராவுத்தர் தொடங்கிய எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் கெளது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப்பெயர் பொறித்துச் சிறப்பளித்தவர்.


      கெளதியா நடுநிலைப் பள்ளி,  கெளதியா உயர்நிலைப் பள்ளி, கெளதியா கலைக் கல்லூரி என்பதாகப் பெயர் பதித்தவர்.  மேலும் தாம் உருவாக்கிய மருத்துவ மனைக்கும் கெளதிய்யா மருத்துவமனை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.  எல்லாவற்றிற்கும் மேலாக கெளதிய்யா அரபுக்கல்லூரியை உருவாக்கி, அதில் பயிலக்கூடிய மாணவர்கள் மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியையும் சேர்த்து படிக்க வித்திட்டவர் ஹாஜீ கருத்த ராவுத்தர் ஆவார்.  மேலும் கெளதிய்யாஅரபுக் கல்லூரியில் ராத்திபு மஸ்ஜிது என்னும் பள்ளிவாசலை நிறுவி அதில் நாள்தோறும் கெளதுநாயகத்தின் ராத்திபு மஜ்லிசை அனுதினமும் ஓதி வரக்கூடிய அழகிய நடைமுறையினை ஏற்படுத்தி,அப்புனித ராத்திபு சுமார் 75 வருடகாலமாக ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் ஓதப்பட்டு வருவது கண்கூடான தெளிவான அற்புதச் செய்தி ஆகும்.


      இவ்வாறு ஹாஜீ கருத்த ராவுத்தர் அவர்களுக்கு கண்ணியமிகு கெளது நாயகம்  ரலி யல்லாஹு அன்ஹு அவர்கள் மீது ஏற்பட்ட இப்பெரும்பேறு எவ்வாறு கிடைத்தது என்பதற்கான காரண காரியம் தெரியவில்லை (அல்லாஹு அஃலம்)


      மேற்காணும் செய்தியை நான் (அப்துஸ் ஸலாம்) கூறியதற்குக் காரணம் உண்டு.  அதனை எமது பாட்டனார் கலீஃபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறிய நிகழ்ச்சி நமக்கு நன்கு உணர்த்தும்.

 

    ஹாஜீ கருத்த ராவுத்தர் அவர்கள் முஸ்லிம்களின் கடமையான ஹஜ் பயணம் மேற்கொண்டார். அதன்மூலம் எல்லா பரக்கத்தையும் அல்லாஹுதஆலா அருளினான்.  அவரும் 6 பெண் குழந்தை 6 ஆண்குழந்தை பெற்று மிகுந்த செல்வாக்குப் படைத்து கோடீஸ்வரராகத் திகழ்ந்தார்.


      மற்றொரு முறை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டார் : பின்னர் பல மாவட்டங்களில் இருந்து வந்த ஆலிம்கள் ஹாஜீ கருத்த ராவுத்தரிடம் கேட்டார்கள்.  முஸ்லிம் ஆகப் பிறந்தவர் ஒரு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டாலே போதுமானது;  நீங்களும் ஒரு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டுவிட்டீர்கள்.  அதன் மூலம் நீங்கள் மிகுந்த பரக்கத்தும் பெற்று விட்டீர்கள். ஏன் மறுமுறையும் ஹஜ் பயணம் மேற்கொண்டீர்கள் என ஹாஜீ கருத்த ராவுத்தரிடம் ஆலிம்கள் கேட்டார்கள்.  அதற்கு ஹாஜீ கருத்தராவுத்தர், நான் அல்லாஹ்விடம் ஒரு நிய்யத்து வைக்கவே மறுமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டேன் எனக் கூறினார்.  அந்தநிய்யத்து என்னவென்றால் கெளது நாயகம் (ரலி) அவர்களின் வாரிசு முன்னால் என் உயிர் பிரியவேண்டும் என்பதே ஆகும்... என்றார் நெகிழ்வுடன்.


      அதன் பின்னர் நடந்தது என்னவென்றால் :


      1958 ஆம் வருடம் ஒரு நாள் தேனி மாவட்டம் பெரியகுளம் என்னும் ஊரில் மீலாது (ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்த நாள் விழா)  நடைபெற்றது.  அந்த விழாவில் கலந்து கொள்ள கெளதிய்யா கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர்.  அப்துல் கபூர் அவர்கள் கெளது (ரலி)  அவர்களின் வாரிசான யாஸீன் (ரலி)  அவர்கள் முன்னால் உரையாற்றச் சென்றார்.  யாஸீன் (ரலி) அவர்களே அந்நிகழ்ச்சியின் சிறப்புவிருந்தினர் ஆவார்கள்.  கெளதிய்யா கலைக்கல்லூரி முதல்வர் அப்துல் கபூர் அந்நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்னர் ஹாஜீ கருத்த ராவுத்தரிடம் சொல்லிச் செல்லலாம் என அவரது இல்லத்திற்குச் சென்றார்.  அதற்கு ஹாஜீ கருத்தராவுத்தர்என்னை அழைத்துச் செல்ல மாட்டீர்களா?எனக் கேட்டார். முதல்வர் அப்துல் கபூர்  உங்களுக்கு வேலை ஏதும் இருக்குமென்றே நான் அழைக்கவில்லை நீங்கள் தாராளமாக வாருங்கள்! என்று கூறினார். இருவரும் ஒரு கருப்பு அம்பாஸ்டர் காரில் மீலாது (ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாள் விழா)விற்குச் சென்றனர்.   அப்துல் கபூர் அவர்கள் உரையாற்றினார்.  அதன் பிறகு யாஸீன் (ரலி)  அவர்கள் ஹாஜீ கருத்த ராவுத்தரை பேசுமாறு கூறினார்கள்.  அவர் தனக்கு அறிந்ததைப்  பேசிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.  அதைத் தொடர்ந்து யாஸீன் (ரலி)  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.   அப்போது திடீரென கரண்ட் போய் விட்டது.  சிறிது நேரத்தில் வந்து விட்டது.  அப்போது கீழே அமர்ந்திருந்த ஒருவர் ஹாஜீ கருத்தராவுத்தரைப் பார்த்தார்.  அப்போது அவர் தலைசாய்ந்து இருந்தது. கீழே அமர்ந்து இருந்தவர் கை சைகை மூலம் ஹாஜீ கருத்த ராவுத்தர் அருகில்அமர்ந்து இருந்தவரிடம் அவரை எழுப்புமாறு சொன்னார்.  அதை கவனித்த யாஸீன் (ரலி) அவர்கள் அவரை எழுப்ப வேண்டாம், அவர் வபாத்தாகிவிட்டார் எனக் கூறினார்கள்.  ஹாஜீ  கருத்த ராவுத்தரின் நிய்யத்தின்படி கெளது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாரிசான யாஸீன் (ரலி) அவர்கள் திருச்சன்னதியில் வபாத்தானார்.ஹாஜீ கருத்த ராவுத்தரை அவருடைய காரில் வைத்தே அழைத்துச் சென்று அனைத்து மரியாதைகளையும் செய்தனர்.

      

    இந்தச் சம்பவத்தை எனக்குக் கூறிய வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், குத்புல் ஃபரீது ஜமாலிய்யா யாஸீன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள், அஹ்லெ பைத்தைச் சேர்ந்தவர்கள் - ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசு  எனவும், கெளது நாயகத்தின் அந்தரங்க வெளிரங்கப் பிரதிநிதி எனவும் தாம் விளங்குவதற்கு இச்சம்பவம் மாபெரும் அத்தாட்சியாக விளங்கியதைக் கூறிமெய்சிலிர்த்தார்கள்.


      பின்னர் குத்புல் ஃபரீத் யாஸீன் மெளலானா நாயகமவர்களை சிலமுறை சந்தித்து அருளாசி பெற்றார்கள்.  ஆனால் ஜமாலிய்யா யாஸீன் நாயகம் (ரலி) அவர்களின் மறைவு, வலிய்யுல் அஹ்ஸன் அவர்களிடம் பெரிய பாதிப்பை உண்டு பண்ணிவிட்டது! அதன் பின்னர் 1976 ஆம்ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் வாழ்வின் மறுமலர்ச்சி என்றே கூறலாம்!(மறுமலர்ச்சி காண முக மலர்ச்சியுடன் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழ்வரை காத்திருங்கள்)

 

 

 

es'>L/c/px