ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  புதுமைகள் சொன்ன பூரணர்


புதுமைகள் சொன்ன பூரணர்

 

- ஆலிம் புலவர்

 


அவையடக்கம்

 

      ஒலிம்பிக்கில் சாதனைபுரிந்த பத்து வீரர்கள் உங்கள் ஊருக்கு வருகிறார்கள்என வைத்துக் கொள்வோம்.  விளயாட்டு சாகசங்களில்ஊருக்குள் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?  அவர்களுக்குமுன் உங்கள் விளையாட்டுத் திறனைக் காட்ட ஆசையிருக்கிறது.  ஆனால் அவர்களோ மாபெரும் ஜாம்பவான்கள்.  உங்கள் நிகழ்ச்சியைத் தொடங்குமுன் மாபெரும் வீரர்களே!நீங்களெல்லாம் மிகப்பெரும் சாதனையாளர், உங்களுக்குமுன் ஏதோ எனக்குத்தெரிந்ததைச் செய்கிறேன் என்று பணிவாக நாலு வார்த்தை கூறிவிட்டு உங்கள் விளையாட்டைத்தொடங்குவீர்கள்.


      அதே போலத் தான்  கவிதை நூல் எழுதும் புலவர்கள்.  தாங்கள் எழுதுமுன் மாபெரும் காவியங்கள் இயற்றியபுலவர்களை எண்ணி, நானும் என்னால்இயன்றதை எழுதுகிறேன் என தம் மன அடக்கத்தைத் தெரிவிப்பது தான் நூலின் தொடக்கத்தில் எழுதும்“அவையடக்கம்” எனும் பகுதி.


      மேலும், தாம் எழுதப்போகும் காவிய நாயகர்களின் வரம்புகடந்த புகழை - பெருமையை - முற்றாக என்னால் எழுத்தில் வடிக்க இயலாது.  ஆனால் அவர்களைப் புகழ வேண்டுமெனும் ஆவல் மனதில்பொங்கி வழிகிறது. என்னால் இயன்றதை எழுதுகிறேன் என்னும்   எண்ணத்தைப்பதிவு செய்வதும் அவையடக்கத்தின் நோக்கங்களில் ஒன்று.


      மேலும் முற்காலங்களில்காவியம் படைப்போர், தாம் அதனை எழுதிமுடித்தபின் அதனை அறிஞர், புலவர், மக்கள்கூடிய அரங்கில் அரங்கேற்றுவது மரபு.  அப்படிக்கூடிய அவையில் தம் பணிவைக் காட்டுமுகமாகவும் அவையடக்கப்  பாடல்கள் அமைந்தன. அவையடக்கம் பாடப்பெறாத காப்பியங்களோ- காவியங்களோ தமிழில் இல்லை எனத்  துணிந்துகூறலாம்.


      கம்பர், தம் காவிய நாயகரான ராமரின் கதையை கம்பராமாயணமாகவடித்தபோது தம்  அவையடக்கப்பாடலாக இதனைப் பாடுவார்.


ஒசை பெற்று உயர் பாற்கடலில் உற்று, ஒரு

பூசை, முற்றவும்நக்குபு புக்கென,

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக் காசுஇல் கொற்றத்து இராமன்கதை அரோ!


      “அடங்காது தொடர்ந்துஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பாற்கடலை ஒரு பூனை நக்கி நக்கிக் குடித்துமுற்றவும் வற்றச் செய்து விட ஆசை கொண்டது போல பரிசுத்தமான இராமனின் புகழை என் கவியாய்எழுதப் புகுந்தேன்” எனவும்.


      பித்தர் சொன்னவும்பேதையர் சொன்னவும் 

      பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?


      பித்தன் - பக்தன்- மேதைமை அற்ற பேதையர் கூறியதையயல்லாம்   ஒருபேச்சாக யாரும் எடுத்துக் கொள்வரோ?


      என்றும் மிக நயமாக- வினயமாகப் பாடுவார்!


      இஸ்லாமிய உலகின்கம்பராக மதிக்கப்பெறும் உமறுப்புலவர், தம் காப்பிய நாயகரான புகழுக்குரிய பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்வரலாற்றுக் காவியமான சீறாப்புராணத்தை இயற்றியபோது அதில் தம் அவையடக்கத்தை இவ்வாறு பாடுவார்.


அடியடித்தொரும் வழுவலால் விதிவிலக் கறியேன்

படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த

லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்

நொடிநொ டிப்பது போலுமொத் திருந்த தென்னூலே


      செவியயல்லாம் செவிடுபடும்படியாக  வானில் இடி இடிக்கிறது.  அதுவும் தொடர்ந்து 

இடிக்கிறது.  அந்த இடியோசையின் முன் பூமியிலிருந்து எழும் ஓசையயல்லாம்ஒடுங்கிவிடுகிறது.  அடங்கிவிடுகிறது.  அந்த நேரத்தில் பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச்சொடுக்கி நொடித்து ஓசை எழுப்பினால்,  இடி இடிக்கும் ஓசைமுன் இந்த நொடிநொடித்த ஓசை கேட்குமா? அறவே கேட்காது.  அதுபோலத்தான் இடிபோன்ற புலவர்கள் முன் நொடிபோன்றயான் என்று  அருமையான உவமைதனைக்  கூறி பணிகின்றார் உமறுப்புலவர்.   

 

    மேலும், பெரும் புயலாகியசுனாமிச் சீற்றத்துக்குமுன் பலவீனமான ஒருசிற்றெறும்பு மூச்சுவிட்டது போன்றது என் பாடல்என பாடுவார் உமறுபுலவர்.


படித்த லத்தெழு கடல்குலகிரிநிலை பதற

வெடுத்து வீசியசண்டமாருதத்தினுக் கெதிரே

மிடித்து நொந்தசிற் றெறும்பொருமூச்சிவிட்டடதுபோல்

வடித்த செந்தமிழ்ப் புலவர்முனியான் சொலுமாறே.


      பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் திருப்பேரர் கெளதுல் அஉளம்  முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் வாழ்வைகாவியமாக வடித்த “குத்புநாயகம்” எனும் காப்பியத்தில் சேகனாப் புலவர்


பாரடை மணலி லக்கம் படுத்துவர்முன்னொன் றெண்ணான்

போரடை யரிமுன் சீதப் புனலரியியைந்த தேபோற்

சீரடை பொருளின் பாடற்செந்தமிழ்ப் புலவர் முன்னர்

நேரடை பனுவல் செய்யு நீர்மையேயோர்மை யோரே!


அதாவது,

      கடல் மணலை எண்ணி முடிக்க முடியாது.  ஆனால் அதனை எண்ணி முடிக்க ஆற்றல் பெற்றான்ஒருவன்.   அத்தகைய ஆற்றல் பெற்றவனுக்குமுன்ஒன்று என்று கூட எண்ணத் தெரியாதவனை நிறுத்தினால் எப்படி இருக்கும்.  அப்படித்தான் பெரும் புலவர்களுக்கு  முன் சிறுபுலவனாகிய நான் செய்த சிறுநூல்என்கிறார் புலவர். 


    இப்படி தமிழ்க் காப்பியங்களில்வரும் அவையடக்கப் பாடல்கள் நம் சிந்தனைக்கு சிறப்பான விருந்து தருவனவாகஅமைந்திருப்பதைக் காணலாம். அந்த வகையில்.......


      நம் காலத்துப் புலவரான சங்க காலத்தை எங்கள் காலத்துக்கேஇழுத்துவரும் தமிழ் மேதையான சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் கண்ணிரண்டின் ஒளியாகபன்னிரண்டில் அவதரித்த பாச நபிகளாரின் வாச வாழ்வை “நாயகர் பன்னிரு பாடல்” எனும் புதிய பிரபந்தமாக யாத்துத் தந்துள்ளார்கள்.


      அதில் அவையடக்கமாக இவ்வாறு பாடுவார்கள்,


      கரியதனைத் தந்துவினாற் கட்டினே னென்றா

      ரரியபுக ழேந்தி யமிதர் - கரியதாங்

      காக்கைக்குத் தன்னூலைக் காணொப்புக் காட்டினென்

      பாக்களு மென்னாம் பதி


அதாவது,

      நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர்,  தம்நூல் மதம் கொண்ட அடங்காத யானையை சங்கிலிக்குப் பகரமாக தாமரை மலரின்மெல்லிய நீண்ட தண்டினால் கட்டிவைத்ததற்கு ஒப்பானது என்பார்.   அமிதசாகரர், தன்னூலானயாப்பருங்கலகக் காரிகைக்கு கருமை யான காக்கையை ஒப்பாக்கினார்.  அவர்களே அப்படிக் கூறினார்களெனில் என்பாக்கள்என்னவோ! எனப் பணிந்து பாடுவார்கள்.  மேலும்நாயகர் பன்னிரு பாடல் நூல்பற்றி  செய்குனாஅவர்கள்,

 

கற்றறிந்த நாவலரின் காவியநூற்களிடை

சிற்றறிஞன் செய்த சிறுநூலோ -மற்றவற்றின்

முற்பனியா மூவுலகு முற்றிலுமேயோச்சுநபி

நற்புகழைக் கூறாதென் னா.


      கற்றறிந்த நாவலர்கள் செய்த சூரியனையயாத்த காவிய நூற்களிடையேசிற்றறிஞனாகிய யான் நூல் செய்து அவற்றின் முன் வைத்தது பனியையே ஒக்கும்.  மூவுலகும் ஆண்ட நபியவர்களின் நற்புகழைக்கூறுதற்கோவெனின் என்னா வெழாது எனப் பகர்வார்கள்.


      அதாவது,  அதிகாலை வைகறையில்மக்களெல்லோரும் குளிரால் போர்வைக்குள் புதைந்து கிடக்க பூமியையே போர்வை போன்றுபோர்த்தி இருக்கும் குளிர் பனி, கதிரவன் மெல்ல மெல்ல கிழக்கேஉதிக்கத் தொடங்கியதும். ஆயிரமாயிரம் கைகள் கொண்ட கதிரவன் தன் விரல்களால்பனிப்போர்வையை விலக்கிவிட்டது போல மெல்ல மெல்ல விலகி, உறைந்துஇருந்தபனி கரைந்து காணாமல் போகிறது. சூரியன் நன்கு உதித்ததும் பனி இருந்த இடமேசுவடின்றி மறைந்துபோகிறது.


      இதேபோல கற்றறிந்த அறிஞர்கள் முன் என் நூல் காட்சி யளிக்கிறது எனப்புதுமையாக உரைக்கின்றார்கள் பூமான் நபி பேரர் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.


      பணிவின் உச்சக்கட்டம் பனியைக் காட்டிய உவமை. மற்ற புலவர்களின்உவமைகளிளெல்லாம் அவர்கள் காட்டிய உதாரணங்கள் உஜூதாக - உருவாக -இருக்கின்றன. உதாரணமாக பூனை, எறும்பு, நொடி, தந்து,காக்கை, இவையயல்லாம்.  ஆனால் சங்கைமிகு செய்குநாயகம் அவர்களின்உதாரணமான பனி, உண்மையிலிருந்து இன்மையாகிப்போகிறது.பணிவுக்கு, அவையடக்கத்திற்கு, இதைவிடவேறு உதாரணம் கூறமுடியாது.


      அவையடக்கப் பாடலில் மற்ற புலவர்களின் உவமைகçளை விஞ்சி புதுமைஉதாரணம் படைத்தவர்கள் நமது “வாழும் ஞானக்காவியமான சங்கைமிகு செய்கு நாயகம்”அவர்களன்றோ!


      இங்கு நாம் மேலும் நயமான ஓர் உண்மையை அறிந்து கொள்வோம். உலகிலேயேஅவையடக்கம் கூறித் தொடங்காத நூல் அல்லாஹ்வின் அருள்மறையான திருக்குர்ஆன்மட்டுமே!  ஏனெனில் அல்லாஹ் யாருக்கும்அடங்கத் தேவையற்றவன். மாறாக, அல்லாஹ் “தாலிகல் கிதாபு லாரைப ஃபீஹி- இந்த அருள் நூலில்சந்தேகமே கிடையாது” என அடித்தும் பேசுகிறான். குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும்இந்தத் தகுதி வாய்க்குமோ!