ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » நாயகமே ! நாயகமே !


நாயகமே ! நாயகமே !


 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தபின் ஸய்யிதுனா உமர் (ரலி)அவர்கள் அழுது கொண்டு கூறியதாவது :

எங்கள் நாயகமே! என் அன்னையும் பிதாவும் உங்களுக்கு அர்ப்பணம்.  மிம்பர் (படி) கட்டுவதற்கு முன்னே தாங்கள் பேரீத்தமரத்தின் அடிமரத்தில் நின்று குத்பா ஓதி வந்தீர்கள்.  மிம்பர் கட்டியவுடனே அந்த அடிமரம் பிரிவாற்றமையால் அழுதது.  தாங்கள் அதன்மீது  தங்கள் கையை வைக்கவே அது அழுகையை அடக்கிக் கொண்டது.

நாயகமே! உங்கள் உம்மத்தவர்கள் உங்கள் பிரிவை நினைத்து அழ அதிகக் கடமைப் பட்டவர்கள்.  அவர்களுக்கு அமைதியளிக்கத் தங்கள் கவனம் மிகத் தேவைப்படுகிறது.

நாயகமே!எனது அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம்.           தங்களுக்குக்கீழ்ப்படிவது அல்லாஹுதஆலாவிற்குக் கீழ்ப் படிவதாகும் எனக்  கூறி அல்லாஹு தஆலா உங்கள் பதவியை உயர்த்தி யிருக்கிறான்.

எங்கள்நாயகமே! எனது அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம்.  அல்லாஹு தஆலாயிடத்தில் தங்கள் சிறப்பு எவ்வளவு உயர்ந்தது என்பது “அல்லாஹ் உம்மை மன்னிக்கட்டும்.  அந்த முனாபிக்குகளுக்கு போக நீர் ஏன் அனுமதியளித்தீர்?” என்னும் வேத வாக்கியத்தின் மூலம் நன்கு தெரிய வருகிறது? தங்கள் வேண்டுதல் இன்றியே தங்களை அல்லாஹு தஆலா மன்னித்து விட்டான் என்பதை இந்த வாக்கியம் நன்கு விளக்குகிறது.
   

எங்கள்நாயகமே! என் அன்னையும் பிதாவும் தங்களுக்கு அர்ப்பணம்.

தாங்கள்காலத்தைப் பொருத்த வரை நபிமார்கள் அனைவரிலும் கடைசியானவர்களாயிருந்தாலும் நபிமார் களிடம்வாக்குறுதி வாங்கிய ஆதி காலத்தில் யாவரிலும் தங்கள் பெயரை ஆண்டவன் முதலில் குறிப்பிட்டிருக்கிறான்.  இதிலிருந்து உங்களின் உயர் தரம் நன்கு தெரிய வருகிறது.

எங்கள்நாயகமே! தங்கள்  மகிமை எப்படிப்பட்டதெனில் நரகத்திற்கிடக்கும் காபிர்கள் கூட உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தவறிவிட்டதாக நினைத்துப்பிரலாபிப்பார்கள்.

எங்கள்நாயகமே! என் அன்னையும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்.

கற்பாறையிலிருந்துஊற்றை வருவிக்கும் அற்புதத்தை அல்லாஹு தஆலா மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அளித்தான்.  உங்களுக்கோ உங்கள் விரலிலிருந்து நீரூற்று ஒலித்தோடச் செய்தான்.  எனவே இதைவிட மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குஅளிக்கப்பட்ட அற்புதம் பெரிதல்ல.

 எங்கள்நாயகமே! எனது அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.

காற்று, சுலைமான் நபி (அலை) அவர்களுக்குக் காலையில் ஒரு மாதத் தொலை தூரத்தையும் மாலையில் ஒருமாதத் தொலை தூரத்தையும் கடந்து செல்ல உதவியாகயிருந்தது.  உங்களுடைய புராக்கு வாகனம் ஒரே இரவில் தங்களை ஏழுவானங்களுக்கு மேலே கொண்டுபோய் விட்டுக்  காலையில் மக்கா கொண்டுவந்து சேர்த்து விட்டது.  இதைவிடசுலைமான் நபி (அலை) அவர்களுடைய அற்புதம் பெரிதல்ல.  ஸல்லல்லாஹு அலைக்க!

எங்கள்நாயகமே! என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அற்புதத்தை ஆண்டவன் ஈசா நபி (அலை) அவர்களுக்கு  அளித்திருந்தான்.  நெருப்பில் வேக வைக்கப்பட்ட ஆட்டு மாமிசத் துண்டங்கள்,“எங்களில் நஞ்சு கலக்கப் பட்டிருக்கிறது.  ஆதலால்எங்களைத் திண்ண வேண்டாம் என உங்களிடம் வேண்டிக் கொண்டன.  எனவே ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த அற்புதம் இதைவிட ஆச்சர்யமானதல்ல.”

 

எங்கள் நாயகமே! எனது அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.

நூஹ்நபி (அலை) அவர்கள்  “இறைவா! பூமியில் குடியிருக்கும் காபிர்களில் எவனையும் அழிக்காது விட்டு விடாதே, எனத் தம் சமூகத்தார்களைப் பற்றிச் சாபமிட்டனர்.  காபிர்கள் ஒட்டகத்தின்  குடலைப் போட்டு உங்கள் பரிசுத்த  முதுகை அசுத்தப்படுத்தினர்.  உஹ்து யுத்தத்தில் உங்கள் முகார விந்தத்தைக் கல்லாலடித்துக்காயப்படுத்தி இரத்தம் ஓடச் செய்தனர்.  உங்கள் இருபற்களை உடைத்தனர்.  அப்போது அவர்களைச் சபிப்பதற்குப்பதிலாக, “என் இறைவா! எனது சமூக மக்கள் அறிவில்லாதவர்கள்; ஆதலால் இவர்களை நீ மன்னித்துவிடு”என இறைஞ்சிக் கேட்டீர்கள்.

எங்கள்நாயகமே! என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.

உங்கள் நபித்துவக் காலமான இருபத்து மூன்று ஆண்டு குறுகிய காலத்திற்குள் ஒரு பெருங் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள்.  (இறுதி ஹஜ்ஜின்போது அரபாத்து மைதானத்தில் கூடியிருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஓரிலட்சத்து இருபத்துநான்காயிரம்.  அப்பொழுது தூரப் பிரதேசங்களில்இஸ்லாமாகி ஹஜ்ஜுக்கு வரமுடியாதிருந் தவர்களின் எண்ணிக்கை எத்தனையோ! அல்லாஹ்வே அறிவான்).  நூஹு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓராயிரம் ஆண்டுகளைக்கொண்ட நீண்ட ஆயுளிற் கூட அத்தனை பேர் இஸ்லாமாக வில்லை.(நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகம் முழுவதும் தமது உம்மத்துகள் பரவியிருக்கக் கண்டனர் என புகாரீ­ரீபில் காணப்படுகிறது)  நூஹ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் உம்மத்துகளில் ஒரு சிலர் தவிர மற்றையோர் எவரும் அவருக்கு ஈமான் கொள்ளவில்லை என குர்ஆன் கூறுகிறது)).

எங்கள்நாயகமே! என் அன்னையும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.

தாங்கள் தங்களுக்குச் சமமானவர்களுடனேயே கலந்துறவாடி யிருப்பீர்களாயின், எங்களுடன் கலந்துறவாடிஎங்களோடு அமர்ந்திருக்க மாட்டீர்கள்.  உங்களுக்குச்சமமானவர் களிடத்திலேயே நீங்கள் விவாகத் தொடர்பு கொண்டிருப்பீர் களாயின் எங்களில் எவரிடத்தும்நீங்கள் விவாகத் தொடர்பு கொண்டிருக்க மாட்டீர்கள்.  உங்களுக்குச் சமமானவர்கள் தவிர வேறு யாரையும் உங்களுடன் இருத்தி உணவளித்திருக்க வில்லையானால் எங்களில் எவரும் உங்களுடன் அமர்ந்து உணவருந்தியிருக்க முடியாது.  அப்படியயல்லாம் இல்லாமல்உங்களுடன் எங்களை அமரச் செய்தீர்கள்.  எங்கள்பெண்களை மணந்து கொண்டீர்கள்.  உங்களுடன் அமர்த்தி எங்களுக்கு உணவளித்தீர்கள்.  கம்பளித் துணி அணிந்தீர்கள்.  அரபு நாட்டுக் கழுதைகளில் சவாரிசெய்தீர்கள்.  சவாரியில் உங்களுக்குப் பின்னே ஒருவரை ஏற்றிக் கொள்ளவுஞ் செய்தீர்கள்.  தரையில்அமர்ந்து உணவு கொண்டீர்கள்.  உணவு கொண்டபின் விரல்களைச் சூப்பினீர்கள்.  இவை அனைத்தையும் பணிவுடைய நோக்கத்திலேயே தாங்கள் செய்தீர்கள். (ஸல்லல்லாஹு அலைக்க வஸல்லம்)                            


தகவல் : கிப்லா ஹள்ரத்