ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » முஹிய்யுத்தீன் நாயகர் (ரலி)


முஹிய்யுத்தீன் நாயகர் (ரலி)


 

இன்று சமுதாயத் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், இன்றைய மதரஸாக்களில் பட்டம்பெற்று வெளிவரும் ஆலிம்கள் - இவர்களில் அனேகர் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லையே....ஏன்? என ஒருவர் தன் சந்தேகத்தைக் கேட்டார்!  நான்கூறினேன்.

ஆம் உண்மைதான்!  இதற்கு என்ன காரணம் எனச் சிந்தித்துப்பாருங்கள்!

இவர்கள்யாரிடமும் ஆன்மீகம் இல்லை.  மஃரிபா எனும் மெய்ஞ்ஞானஅறிவு இல்லை.  அதுமட்டுமல்ல. அந்த மஃரிபாவே மார்க்க விரோதம் எனத் தீர்மானித்து விட்டார்கள் இவர்கள். அப்படியிருக்க இவர்கள் எப்படி கெளதுல் அஃழம்(ரலி)அவர்களை அறிவார்கள்?அவர்களின் அருமை பெருமைகளை எப்படிப் பேசுவார்கள்? என்றேன். உண்மைதான் என ஒத்துக் கொண்டார்!

ஆலிம்களும்- தலைவர்களும் - ஆண்டகை அவர்களை அறியாத போது மக்கள் எப்படி அறிவார்கள்? சொல்லப்போனால் இது ஒரு ஞான சூன்யமான காலம் என வர்ணிக்கலாம். இஸ்லாம் கூறும் மார்க்க அறிஞர்கள் - தலைவர்கள் - இவர்கள் இல்லை. ஏனென்றால் முன்வாழ்ந்த மார்க்க அறிஞர்கள் - ஆன்மீகச் சீலர்களாகவும், தலைவர்கள்- ஆன்மீத் தொடர்புடையசீடர்களாகவும் இருந்தார்கள்.  மேலும், நமக்குமுன் வாழ்ந்த முன்னோர் இவர்களைப் போன்று இல்லை. கெளதுல் அஃழம் (ரலி) என்றால் அச்சமும்மரியாதையும் கலந்து அன்போடு அவர்களை நினைப்பார்கள்.  இவர்களோ ஆன்மிக ஞானிகளை மறைந்திருக்கும் பகையாகவே உணர்கிறார்கள்.  அவர்களைப் பேசும் மேடைகள் ஷிர்க் வாடை வீசுவதாக மிரளுகிறார்கள்.  ஆனால் உண்மை நிலை என்ன?

இவர்கள் இன்று நெஞ்சில் ஏந்தியிருக்கும் ஈமான் இஸ்லாம் இவர்கள் சொல்வதைப்போல் தூய வடிவத்தில் கிடைத்திருக்கக் காரணம் யார் தெரியுமா? 

 
தீனுக்கு உயிரளித்த  முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி) அவர்கள் தாம்; அவர்களின் சேவைகள் - உழைப்பு தான் காரணம். பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின், தங்கள் காலத்திலும் அதற்குப்  பின்னரும் மிக அதிகமாகப் பேசப்பட்டவர்களாகவும்,இஸ்லாமிய அறிவுலகின் கிப்லாவாகவும் திகழ்ந்தவர்கள் ஆண்டகை அவர்கள் தாம்!

தமிழகத்தில் எழுப்பப்பட்ட பள்ளிகளெல்லாம் முஹிய்யுத்தீன் ஆண்டகை பள்ளிவாசல் என கம்பீரமாக அழைக்கப்பட்டகாரணமென்ன? நம்முன்னோர், பாஷா முஹிய்யுத்தீன் தர்வேஷ் முஹிய்யுத்தீன், காதர் முஹிய்யுத்தீன் என்றெல்லாம் தம்பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்ததன் உள் அர்த்தம் என்ன?          அதிரையில்  காதிர் முஹிய்யுத்தீன் கல்லூரி எனவும் உத்தமபாளையம் ஹொதிய்யா கல்லூரி எனவும் மகிமைப் படுத்திய மர்மம் என்ன? நம் முன்னோர்கள் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் முக்கியத்துவத்தை - மகத்துவத்தை உணர்ந்திருந்தார்கள்.

முஹிய்யுத்தீன்நாயகர் (ரலி) அவர்கள் என்னதான் சேவை செய்தார்கள்?

இலட்சக்கணக்கான அன்னியரை இஸ்லாத்தில் சேர்த்தார்களா? ஊர்கள் தோறும் பள்ளிவாசல்கள் கட்டினார்களா? வீதிவீதியாகஅலைந்து மார்க்கப் பிரச்சாரம் செய்தார்களா? இல்லை... இவற்றையயல்லாம் அவர்கள் செய்யவில்லை.  ஆனால் இவற்றையயல்லாம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் சீர் செய்தார்கள் உண்மையாளர்களாக மாற்றினார்கள்.  செம்மையாக்கினார்கள்.  செப்பனிட்டார்கள்.  ஏனெனில் அவர்கள் காலத்தில் ஊர்கள் தோறும் முஸ்லிம்கள்....வீதிகள் தோறும் மதரஸாக்கள்...  பள்ளிவாசல்கள், தலைப்பாகை, தாடி என, எங்கும் இஸ்லாமியக் கோலம் பேணும் முஸ்லிம்கள்தாம் வாழ்ந்தார்கள்.


எனவே,இவற்றை அவர்கள் உருவாக்கவேண்டிய அவசியமில்லாமல் இவற்றிற்கு அடித்தளத்திலிருந்த உட்புறத்தை அவர்கள் சீர் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. அதனை அவர்கள் செவ்வனே செய்து முடித்தார்கள். 

 

இந்தப்பணியை எவராலும் செய்துவிட முடியாது!  பொம்மை முஸ்லிம்களாக வாழ்ந்தவர்களை உண்மை முஸ்லிம்களாக மாற்றினார்கள்.  அவர்கள் காலத்துக்குப்பின் காணுகின்ற மனிதர்கள்எல்லாம் புனிதர்களாகவும் ஆலிம்களெல்லாம் வலிமார்களாகவும், சுல்தான்களெல்லாம் நீதியாளர்களாகவும் ரசவாதம் பெற்றார்கள்.  மதரஸாக்களெல்லாம் நாதாக்களை உற்பத்தி செய்யும் கேந்திரங்களாக மாறின.  அவாம்கள் எனும் பாமரர்களெல்லாம் மெய்ஞ்ஞான ரகசியம் பேசும் மேலாளர்களாக மாறினார்கள்.  மஃரிபா எனும் இறை ஞானம் பற்றி ஆயிரக்கணக்கான நூற்கள் இயற்றப்பட்டன!  இஷ்க் எனும் இறைக்காதல் - தவக்குல்-ரிழா - இவையயல்லாம்  சாதாரணமாகப் பேசப்படும்பொருளாயின.  முஸ்லிம்களின் இதயங்களில் இறைக்காதல் எனும் நெருப்பு பற்றி எறிந்தது.  இறைவன் கூறுவதுபோல நின்ற நிலையில் படுத்தநிலையில் அமர்ந்த நிலையில் இறைவனை திக்ரு செய்யும் ஜாஹித்கள் உருப்பெற்றார்கள்.

தன்னைசீரமமைத்துக் கொள்ளும் தைக்காக்கள் - கான் காஹ் தியான மடங்கள் எழுந்தன! வாழ்வோரெல்லாம் வலிமார்களாக - கராமத் உடைய வர்களாக மாறிப்போனதால் அவர்கள் அடக்கத்தலங்கள்  தர்காக்களாக எண்ணிறந்த அளவில் எழுந்தன!

ஹள்ரத் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் சேவையின் தாக்கம் பல நூற்றாண்டுகளாக இந்தப்பாருலகை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.  அறபுநாட்டில் வஹ்ஹாபிய ஆட்சி வரும் வரை  வலிமார்களும்அவர்களின் வரலாறுகளும் மக்களுக்குத் தேனாகத் தித்தித்தன! வஹ்ஹாபிகளின் தீய - மாய -பிரச்சாரத்தால் பெருமானாரின் பெருமைகள் மறக்கடிக்கப்பட்டது போல - கெளதுல் அஃழம் (ரலி)அவர்களின் மகிமையும் மறக்கடிக்கப்படுகிறது.

ஆனால்,இவையயல்லாம் தற்காலிகமானவைதாம். இந்ததற்காலிக கிரண காலத்திலும் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் வாரிசுகள் அவர்களின் ஞானத்தை உயரப்பிடித்து உலா வரத்தான்செய்கிறார்கள். மெய்ஞ்ஞானம் இந்த உலகிலிருந்து அடியோடு ஒழிந்து விடாது. ஏனெனில் அதுஅல்லாஹ்வின் அறிவு - அல்லாஹ்வைப் பற்றி அறியும் - அறிவு. பெருமானாரின் அந்தரங்க அறிவு! வலிமார்களின் வற்றாத ஜீவ ஊற்று,

அந்தநித்திய அறிவு உறைந்திருக்கும் சத்திய சீலர்களின் அணி செல்வோம்.  அவர்களின் அடி மறவோம்!