ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு 


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு 


 

அத்தியாயம் : 86

 

அல்லாஹ்வின் தூதரை யாராலும் அழிக்க முடியாது        

 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹது யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள், (நவூதுபில்லாஹ்) என்ற செய்தி ஒருபுறம்.  இல்லை...... இல்லை..... அண்ணலார் உயிரோடுதான் இருக்கின்றார்கள் என்ற சுபச்செய்தி ஒரு புறம்.  யுத்தகளமே கலகலத்துப் போயிருந்தது.  எதிரிக ளிடையே பெரிய நிம்மதி.  அண்ணலார் மூலமாக நமக்கு இனி எந்த இடைஞ்சலும் இல்லை.  எப்படியோ புதிய மார்க்கத்தை ஒருவாறாக அழித்து விடோம். இனி நம் புராதான மார்க்கம் தான் நமக்கு உறுதுணையாக இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் யா லாத் - உஸ்ஸா! யா லாஹுபல்! என்று காட்டுக் கத்தம் கத்திக்கொண்டே  தங்கள் பாசறையை நோக்கிச் செல்லத் தலைப்பட்டனர்.

மயக்கமாகக்கிடந்த திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இருபது நபித் தோழர்கள் அரைவட்டமாகச்சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக நின்றனர். எதிரிகளில் சிலர் இவர்களைப் பார்த்து, “இவர்களைப்பார்த்தால் உயிருக்குப் பயந்து ஓடக் கூடியவர்களாகத் தெரியவில்லை.  சரி தலைமையே போன பிறகு இவர்களைக் கொன்று ஆவதென்ன?”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு திரும்பலானார்கள்.  எதிரிகள் திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில் அருமைநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்தார்கள்.  சூழ இருந்த தோழர்கள் மத்தியில்தாங்க முடியாத ஆனந்தப் பரவசம் நிலவியது.  அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்  தோழர்களைப்பார்த்து சைகையாகத் தம்மை பின் தொடரும் படிக் கூறி மெல்லப் புறப்பட்டார்கள்.  அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.  இருபுறமும் அண்ணலின் கன்னப் பகுதியில் குத்தியிருந்தகவசத் துண்டுகள் இரண்டு தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது.  அதனால் அவர்கள் சற்று நின்றார்கள்.  இதை உணர்ந்த அபூஉபைதா (ரலி) என்ற நபித்தோழர் அவற்றைத்தம் பற்களால் கடித்து ஒன்றன்பின் ஒன்றாக வெளியே எடுத்து விட்டார்.  அவ்வளவுதான் பிடுங்கிய இடத்திலிருந்து இரத்தம் பீரிட்டுக்கொண்டு கொட்டத் தொடங்கிவிட்டது.  இதைக்கண்ட திருநபியின் தோழர் மாலிக் என்பவர் தமது வாயை அண்ணலாரின் கன்னத்தில் வைத்து இரத்தத்தைஉறிஞ்சினார்.

மரித்தவர்போலிருந்த ஷ­ம்மாஸ் தவிர அங்கிருந்தவர்களுள் அதிக காயங்கள்பட்டிருந்தவர் தோழர் மாலிக் தான். அப்போது அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனது இரத்தத்துடன் தனது இரத்தம் கலந்துள்ள ஒருவரைக் காண விரும்பினால் ஸனானின் மகன் மாலிக்கைக் காணவும்” என்று கூறினார்கள்.  இதில்அபூ உபைதாவும் கூட்டு சேர்ந்திருந்தார். அவர் இவருக்கு முன் அவற்றைப் பிடுங்கும் முயற்சியில்  தனது பற்கள் இரண்டை இழந்து வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிந்த நிலையில் நின்றிருந்தார். அவரைக்கண்ட நபிகளார், “எனது இரத்தத்தை யாருடைய இரத்தம் தொட்டதோ அவரை நரக நெருப்பு அணுகாது”என்று கூறினார்கள்.

இப்போது நபிகளாரின் தலைமையில் இச்சிறு கூட்டம் உஹதுப் பள்ளத்தாக்கு வழியாக சென்ற போது, ஏற்கனவே பாதுகாப்பை நாடி மலைமீது ஏறியிருந்த முஸ்லிம்களில் சிலர் இக்கூட்டத்தினரைக் கண்டு விட்டார்கள்.  அதில் ஒருவரான கஅப் இப்னு மாலிக் என்பவர் தூர இருந்துபார்த்தார்.  பெருமானாரைப் போன்ற ஒருவர் வருவதுபோல்தெரிகிறதே என்று எண்ணிக் கொண்டு தம் கையை கண்களுக்கு மேல் வைத்தபடி இன்னும் கூர்மையாகஉற்று நோக்கினார்.  கண்டு கொண்டார்! வருபவர்கள் அண்ணல் எம் பெருமான் அவர்கள் தாம் என்று. “ஓ! முஸ்லிம்களே தைரியத்தோடிருங்கள். இதோ அல்லாஹ்வின் தூதர்” என்று உரக்கக் கத்திவிட்டார்.  சோர்ந்து போனவர்களுக் கெல்லாம் புத்துணர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  வெற்றி பெற்ற உவகை உண்டானது.  உடனே அண்ணலார் அவரைப் பார்த்து சைகையாக சும்மா இருக்கும்படிகூறினார்கள்.  அதன் பின் அவர் வாயைப் பொத்திக்கொண்டார்.  இருப்பினும் அவர் போட்ட கூச்சல்,அண்ணலார் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? என்று வேவு பார்க்க வந்த ஒற்றைக் குதிரைவீரன் காதிலும் விழுந்தது.  இவன் தான் அண்ணலாரைத்தாக்கிய உபை.  ஆ! அவர் கொல்லப்பட வில்லையா?எனக் கூறிக் கொண்டு நபிகளாரை நோக்கி வேகமாக விரைந்து வந்தான்.  கூட இருந்தவர்கள் அவனை எதிர்க்க முற்பட்டபோது அண்ணலார் அவர்கள் ஒட்டகத்தின்மீதிருந்த ஈக்களை உலுப்பி உதறி விடுவதுபோல் அனைவçயும் தள்ளிவிட்டு ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டு முன்னே சென்றார்கள்.  அப்போது அந்த கொடுங்காபிர் உபை என்பான், ஓ முஹம்மதே! ஒன்று நீர் உயிரோடு இருக்கவேண்டும், இல்லை நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று கடுகடுத்தவனாகப்பாய்ந்து வந்தான். தோழர்கள் அனைவரும் செய்வதறியாது திண்டாடிப் போனார்கள். சரேலென்று அண்ணலார் ஈட்டியை அவன் மீது எறிந்தார்கள். அந்த  ஈட்டி அவன் கழுத்தில் போய் குத்தியது.  எருமை மாட்டைப் போல் அலறியவாறு அவன் குதிரை மீதிருந்துகீழே விழப்பார்த்தவன் சுதாரித்துக் கொண்டு குதிரையை திருப்பிக் கொண்டு சரிந்த நிலையில்ஓட்டம் பிடித்தான்.  எங்கேயும் நில்லாது நேரேபாசறைக்குச் சென்று விட்டான்.  “ஐயோ! முஹம்மது என்னைக் கொன்று விட்டார்!” என்று கத்தினான். ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் அப்படியயாரு பெரிய காயம் ஏதும் ஏற்பட வில்லையேஎன்றனர்.  ஆ! நீங்கள் சும்மா இருங்கள்! முஹம்மதுஎன்னைக் கொல்வதாகக் கூறி ஈட்டியைப் பாய்ச்சினார், “இறைவன் பெயரால் சத்தியமாகச் சொல்கிறேன்என் மீது அவர் உமிழ்ந்திருந்தாலும் கூட நானிறந்து போயிருப்பேன்” என்று அவன் பாட்டிற்குகத்திப் புலம்பிக் கொண்டே இருந்தான்.  எப்படியும் இறந்து விடுவோம் என்ற மரண பயம் அவனைக் கவ்விக் கொண்டது. குறைஷியர்களுக்கு ஒரே குழப்பம் என்ன இவன் இப்படிக் கூறுகிறான். அப்படியானால் இன்னும் முஹம்மது இறக்க வில்லையா? என்று சிந்திக்க லானார்கள். எப்படியும் முஹம்மது இறந்துதான் போயிருக்க வேண்டும் என்றே நம்பலானார்கள்.   (தொடரும்)