ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   »  ஜீன் வங்கி


ஜீன் வங்கி

 

- ரஹ்மத் ராஜகுமாரன்

 

சின்ன வயதில் எங்கள் மாமா வீட்டில் பெரிய கூட்டுக் குடும்பம். பந்தி பந்தியாக எப்போதும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  எங்க பாட்டி, மாமா, உம்மா பாத்திமாநாச்சியா, ஒரு அன்ன பூரணி. வெண்கலப் பானையில் அரிசி வேகும் போதே வாசனை வாசல் வரை தூக்கும்.  குதிரை வால்சம்பா, மணிச்சம்பாவாசனை சம்பா, மடுமழுங்கி, கவுனி, தூயமல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள்எல்லாம் வீட்டில் புழங்கி வந்தன.

பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர். 8, சி.ஓ. 33 என்றெல்லாம் அரசாங்க இலாகாத்தனமாகப்பெயர் வைக்கப்பட்ட ‘ஹைப்ரிட் அரிசி’ வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ‘ரிச்சாரியா’ (அரிசியின் பெயர், புள்ளி விபரங்களுக்கு விஞ்ஞானி ரிச்சாரியாவை நாடுங்கள். என்னை விட்டு விடுங்கள்.)

ஆனால் அந்தச் சுவையான பழைய அரிசிகள் எல்லாம் எங்கே காணாமல் போய்விட்டன?... அப்பப்பா அந்தவாசனை மட்டும் இன்னும் மூக்கு நுனியில்....! இப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் இயந்திரத்தில் பாக்கிங் செய்து பிராண்ட் முத்திரை பதித்த என்னவோ ஓர்அரிசி தான் கிடைக்கிறது.;சோறு வடித்தால் சவக்சவக்கென்று இருக்கிறது.  இந்த அவல நிலையைக் குறிப்பிட சமீப காலத்தில் உருவாக்கப்பட்டவார்த்தை (Bio - Diversity) ஒரு மண்ணுக்கே உரிய பயிர் வளமும் உயிர் வளமும் துடைத்துஎறியப் படுவது தான் பயோ டைவர்ஸிட்டி பிரச்சனை எனப்படுவது.

பூமியில் மனிதன் சாப்பிடத் தகுந்த தாவரங்கள் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவை உண்டு.  இருந்தாலும் நாம் சுமார் 150 வகைகளை மட்டுமே உண்டு வாழ்கிறோம்.

நிலத்தில் எதைப் போட்டாலும் வேகமாக, நிறைய வளரவேண்டும் என்ற பச்சைப் புரட்சி அவசரத்தில் ஒரு சில ஒட்டு ரகங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பயிரிட்டதில்நம் பாரம்பரியமான அரிசி பருப்பு வகைகளெல்லாம் ஓரம் கட்டப்பட்டுநல்ல தமிழ் போல் மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றன.  தடியங்காயும் தும்மிட்டிக்காயும் வழக் கொழிந்துபோய் மார்க்கெட் பூரா இங்கிலீஷ் காய்கறிகள். கொல்லைப் பக்கத்தில் உயிரோட்டமான கண்களுடன் திட காத்திரமாக நின்றிருந்த காராம்பசுக்கள் எல்லாம் லாரியில் அடைத்து கேரளாவுக்குக் கடத்தப்பட்டு அடி மாடுகளாய் விற்றுவிட்டோம்.  கிழங்கு கிழங்காக ஜெர்ஸி பசுக்கள்வந்திருக்கின்றன; தொடர்ந்து ஹார்மோன் இன்ஞ்செக்­ன் போடாவிட்டால் அவை பால்கறக்க மறுக்கின்றன.

தாய் நாட்டு தாவரங்களை மறந்து வெள்ளைக் காரனிடமிருந்து விதைகளை வாங்கிப்பயிரிடுவதில் ஓர் ஆபத்து இருக்கிறது.  இவ் விதைகளெல்லாம் மொன் சாந்தோ போன்ற பன்னாட்டுக்கம்பெனிகள் ‘பேடண்ட்’ உரிமம் பெற்றவை. இந்த விதை நெல்லை ஒரு வருடத்திலிருந்து அடுத்தவருடத்திற்கு எடுத்துப் பயன்படுத்த முடியாது. அவர்கள் சட்டப்படி குற்றம்.  வம்பு வழக்குப்போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கி வந்து டிராக்டரைக் கொண்டு கதிர் பிடித்த பயிரையயல்லாம் மடித்துஉழுது விட்டுப்போய் விடுவார்கள்.  நம் விவசாயம் அவர்களுக்கு முழுவதுமாக அடிமைப்பட்ட பிறகு இஷ்டத்துக்கு விதையின் விலையை ஏற்றிக் கொண்டே போனால் என்ன செய்வது...?ஒரு தலைமுறைக்கு விதைகள் முளைக்காமலே செய்யக்கூடிய பயங்கர டெர்மினேட்டர் ஜீன் கூட அவர்களிடம் இருக்கிறது.

நம் மஞ்சள், வேம்பு ஆகியவற்றின் மருத்துவக் குணங்கள் பற்றி மேலை நாடுகளில் ஏராளமான பேடண்ட் அவர்கள் வாங்கித் தள்ளிவிட்டார்கள்.  அத்தனையும் நம்முடைய பாட்டி வைத்திய அறிவு! இனிமேல்வேப்பம் பூ பச்சடி சாப்பிட ஆசை எழுந்தாலோ, பூர்ண மஞ்சள் தேய்ச்சுகுளிக்க ஆசைப்பட்டாலோ ஏதாவது அமெரிக்கக் கம்பெனி டப்பாவில் அடைத்து விற்பதைத்தான் வாங்கவேண்டும். இப்போது வரும் பல பயிர்கள், மரபீனி தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி ஜீன்கள் மாற்றப்பட்டவை. அவற்றில் என்னென்ன வல்லடிகள் வரும் என்பதைக் காலம்தான் சொல்ல முடியம்.  பிளாஸ்டிக் அரிசியைச்சாப்பிடவே முடியாதபடி ஏதாவது வில்லங்கம் ஆகிவிட்டால் அப்போது நம்ம கிச்சிலிச் சம்மபாதான் காப்பாற்றும்.அதற்காகவாவது நம்சம்பாக்களைப் பாதுகாப்பது அவசியம்.  லோக்கல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இயற்கை படைத்திருப்பது அவற்றைத்தான்.

காடுகள் அழிந்து ரியல் எஸ்டேட் ஆவதால், ஆறுகளில் ரசாயனக்கழிவுகள் கொட்டப்படுவதால், இன்னும் பற்பல சுயநலங்களால்உலகத்து உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.  ‘டோடோ’ பறவை முதல் தாடிப் புலி வரை கடந்த 300 வருடங்களில் தொலைந்த பிராணிகளுக்கு யாரும் கணக்கே வைத்துக் கொள்ளவில்லை.  அன்றைய வரலாற்றுப் புத்தகத்தில் வாழும் பறவையாகத்தான்இன்னும் அன்னப் பறவை நமக்குத் தெரிய வருகிறது.

மனிதர்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே அவன் விட்டு விட மாட்டான்.  எனினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது)அவர்களை பிற்படுத்துகிறான் (குர்ஆன் (16:61))

ஓர் இனம் அழியும் போது அவற்றின் ஜீன் என்கிற மரபீனிகளில் சேகரிக்கப்பட்டிருந்த உயிரின் டிசைன் பற்றிய தகவலும் நிரந்தரமாக இழக்கப் படுகிறது என்பதை இன்றைக்குத் தான்விஞ்ஞானம் கண்டுள்ளது.  கடைசியாக ஒருநாள் குளோனிங் முறையில் ஆடு மாடு ஏன் மனிதனைக் கூட தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  மனிதர்கள்                  அனைவரும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் மாதிரி பிறக்கப் போகிறார்களென அறிவியல்ஆருடம் சொல்கிறது.

ஒரு பிரதேசத்தின் மரபீனி வளத்தைஜீன்குளம் (Gene Pool) என்று குறிப்பிடுவார்கள்.  நம்முடைய ஜீன் குளம் இப்போது வேகமாக வற்றிக் கொண்டிருக்கிறது! இதைக் கண்டு கவலை கொண்ட சில நல்ல இதயங்கள், ஆங்காங்கே ஜீன் வங்கிகளை ஏற்படுத்தி அவற்றைப்பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர்.  ஜீன்வங்கிகள் திவாலாகி விடுமா....? என்கிற பயமும் விஞ்ஞானத்திற்கு உண்டு. பண்டைய கோபுரங்களின் உச்சியில்  வெள்ளத்துக்கு எட்டாமல் பெரிய கலசங்கள் அமைத்து அதற்குள் மரக்கால் கணக்கில் தானியங்களைச் சேகரித்துசீல் வைத்திருந்தாகச் செல்வார்கள்.  இது அவர்கள்டெக்னாஜியால் முடிந்தவரை ஜீன் வங்கி ஏற்படுத்தும் யுக்தியாக இருக்கலாம்.  லேசாகத் திறந்து பார்க்க அனுமதித்தால் ராஜராஜன்காலத்தில் சோழநாட்டு கேழ்வரகு எப்படி இருந்ததென்று தெரிந்து கொள்ள ஆசை.

குர்ஆனிலும், பைபிளிலும் ஒரு சம்பவம் காணப்படுகிறது.  அது வெள்ளப் பிரளயம் வந்து உலகமே அழிய இருந்த போது நபி நூஹ் (நோவா) எல்லா பிராணிகளிலும், ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிப் போய்க் காப்பாற்றினார்.  (இந்தக் கொசுவைமட்டுமாவது ‘கப்பலில் இடமில்லை’ என்று செல்லி இறக்கிவிட்டிருக்கலாம்) ‘நோவா’ என்கிறநபி நூஹ் (அலை) வின் கப்பல் தான் உலகின் முதல் மிதக்கும் ஜீன் வங்கி.  ஒவ்வொரு உயிருள்ள பிராணியிலிருந்து ஆண்,பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்(குர்ஆன் 11:40)  ஆனால் இப்போது உலகம் அழிவதற்கு, கடவுள் காரணாக இருக்க மாட்டார்; நாமே சொந்த முயற்சியில் எல்லா வகைக் கொலை ஆயுதங்களையும்படைத்து விட்டோம்.  பறவைக் காய்ச்சல்,எய்ட்ஸ் போன்ற கொள்ளை நோய்களால் நாமும், நாம் சாப்பிடும்பசு பட்சிகளும் பெரிய அளவில் அழிய நேரலாம் என விஞ்ஞானம் கருதுகிறது.

‘குளோபல் வார்மிங்’ என்னும் கார்பன் புகையால் பூமி சூடாகி இட்லி மாதிரிவெந்து கொண்டிருந்தால்கடல்கள் பொங்கி மலைகள் உருகி, அது வேறு ஆபத்துகாத்திருக்கிறது.  எனவே நம் ஜீன்களைச் சேகரிப்பது அவசரமான அவசியத் தேவையாகி விட்டது. நார்வே நாட்டில் பிரளய காலத்துக்கு விதைகளை சேமித்துவைக்க ஒரு பெட்டகம் கட்டியிருக்கிறார்கள். வட துருவ வட்டத்தில் பனி மலைக்குள் குடைந்து கான்க்ரீட் குகை அமைத்து,உள்ளே ஹைடெக் அலமாரிகளில் இரண்டரை லட்சம் விதை ரகங்களைச் சேகரித்திருக்கிறார்கள். அவ்விதைகளைப் பாதுகாக்க ஃபாயில்காகிதத்தில் சுற்றி மைனஸ் பதினெட்டு டிகிரியில் உறைய வைத்திருப்பதால் விதைகள் ஆயிரக்கணக்கானவருடங்களுக்கு வீணாகப் போகாது.  அப்படியே ஏதாவது  அணுகுண்டு வெடித்து நிரந்தரமாக மின்சாரம் போய்விட்டால் ஆர்க்டிக் ஐஸ் மலைக்குள் புதைத் திருப்பதால் நீண்டகாலம் விதைகள் உயிருடன் இருக்கும் வெளியே காவலுக்கு வெள்ளைக்கரடிகள் காத்து நிற்கின்றன. பூமியிலிருக்கும்  உயிரினங்கள் தங்களின் உணவுகளைச் சுமந்து கொண்டு திரிவதில்லை.  அல்லாஹ்வே அவை களுக்கும் உங்களுக்கும் உணவு அளிக்கிறான்.(குர்ஆன் (29:60))

இந்த விதைப் பெட்டகமான ஜீன் வங்கிக்கு எல்லா நாடுகளும் தத்தம் உள்ளுர்விதை ரகங்களை அனுப்பி வைத்திருக்கின்றன.  பார்லியில் மட்டுமே கிட்டத்தட்ட நாலாயிரம் வகைகள் சேர்ந்திருக்கின்றன.  உலகமெல்லாம் பெரிய அளவில் யுத்தம் வந்தோ, வைரஸ் தாக்குதல்வந்தோ உலகத்து விளை நிலங்கள் எல்லாம் தரிசாகப் போய் விட்டால் இவ் விதைகள் அப்போது பிறந்திருக்கும்புதிய மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே! என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். போரில் இறக்காமல் மிச்சமிருக்கும் ஜனங்கள் மணப்பாறை மாடு கட்டி மரக்கலப்பை யால் உழுது,கமலையில் தண்ணீர் இறைத்து மறுபடி மொகஞ்சதாரோ மனித நாகரீகத்தை ஆரம்பிக்கலாம். 

நம்முடைய அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதனை அவனிடமிருந்துநாம் நீக்கி விட்டால் நிச்சயமாக அவன் நம்பிக்கையிழந்து பெரும் நன்றி கெட்டவனாகி விடுகிறான்.குர்ஆன் (11:09)

உலகத்து மாந்தர்கள் பூமியில் ஆங்காங்கே ஜீன் வங்கி திறந்து உலகத்து அத்தனை பொருட்களின் விதைகளை சேமித்து அடுத்த யுக மக்களுக்குத் தயார் செய்து வைத்தாலும்...நம்மை விட்டுப் பிரிந்து காணாமல் போன குதிரைவால் சம்பா, மணிச்சம்பா,வாசனை சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்னும் அழகழகான அரிசி வகைகளின்வாசனையாவது விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜீன் வங்கியில் கிடைக்குமா?

அந்த ஜீன் வங்கியில் அத்தனை வாசனையான அரிசிச் சோற்றை வகையாக வாஞ்சையுடன் ஈந்த எங்க பாட்டியம்மா பாத்திமா நாச்சியா கிடைப்பார்களா?