ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » அல்லாஹ்வே இது நியாயமா?


அல்லாஹ்வே இது நியாயமா?  அரபியர்களுக்கு மட்டும் சாதகம் செய்துவிட்டாயே!


மனிதர்களிடம் கூட நியாயம் கேட்க முடியவில்லை.  அந்த மாமன்னனிடம் நியாயம் கேட்க தைரியம் எப்படிவந்தது? அஃதோர் அசட்டு தைரியம் தான்.  ஆனால் நியாயமான கேள்வி.

1970 களில் ஒருநாள்.  என்னால் அந்த நாளைச் சரியாகக் குறிப்பிடமுடியவில்லை.  இருந்தபொழுதும் மறக்க முடியாத அந்த நாள், நான் பிறந்து வளர்ந்த பேகம்பூரில் என்னுடையமுன்னோர் அடங்கியுள்ள அடக்கஸ்தலத்தில் நின்று அவர்கள் அனைவருக்காகவும், துவா (ஜியாரத்) செய்துவிட்டு நகரும் பொழுது, அல்லாஹ்வே! நீ அரபியர்களுக்குச் சாதககமாகவும், மற்றயினங்களுக்குப் பாதகமாகவும்செய்தது நியாயமா? என்று கேட்டேன்.  மிகவும் அச்சமின்றி சாதாரணமாகக் கேட்டேன்.  என்னை தப்லீக் ஜமாத்தில் நான் ஈடுபடுத்திக் கொண்டசமயம் அது.  தப்லீக் ஜமாஅத்தினர் எனக்குக் கானல்நீரைத் தண்ணீர் எனக் காட்டிய சமயம் அது.  அறிவியலில்ஆராய்ந்து கொண்டு இருந்த நான் தப்லீக் ஜமாஅத்தினர் காட்டும் அறியாமையில் இறைவனைத் தேடிக்கொண்டிருந்த சமயம் அது.

எதையோ அரபியில்கூறி தாறுமாறாக, விஞ்ஞானத்துக்குஎதிர்மறையாக அல்லாஹ்வைப் பற்றிக் கூறுகிறார்களே!  இதை எல்லாம் என் அறிவுக்கு மாறாக நான்ஏற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்கள்.  இதை நான் எப்படி ஏற்றுக் கொள்வது?    நான்தமிழ்மொழியில் என் தாய்மொழியில் ஓரளவு தெளிவு பெற்றிருக்கிறேன்.  ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அரபியர் மத்தியில் அரபியாக உதயமாக்கி இருக்கிறாய்.  இறைமறையையும் அரபியிலேயே வெளிப்படுத்தி இருக்கிறாய்.  மற்றமொழியினர் -  குறிப்பாக தமிழனாகிய நான் எப்பொழுது அரபியைக் கற்றுபாண்டித்துவம் பெற்று இறைமறையின் உள் அர்த்தம், வெளி அர்த்தம்புரிந்து உன்னைப் புரிந்து கொள்வது? நீ அரபியர்கள் அல்லாத மொழியினருக்குபாதகம் தான் செய்து இருக்கிறாய்.  இது ஏன்?என்று கேட்டுவிட்டு.  என் வீடுநோக்கி சென்று கொண்டே இருந்தேன்.  நான் ஒருஇடத்தில் நடந்து வந்து இருக்கும் பொழுது அதாவது பேகம்பூரில் செம்பட்டி, செல்லும் சாலையும் மதுரை செல்லும் சாலையும் சந்திக்கும் இடம். ஒருவர் என்னைசந்திக்கிறார்.  அவர் தாடி, தலைப்பாகை, ஜிப்பா கைலி அணிந்த தப்லீக்காரர்  அல்ல.  நான்சிறுவனாக இருந்து விளையாடிய பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைவிட வயதுகுறைந்தவர்.  கால் சட்டையும், கைச் சட்டையும் அணிந்து தலையில் தொப்பி அணியாதவர் (வெளி வேடம் இல்லாத மெய்ஞ்ஞானி). அவர் நீங்கள் அனைவரும் அறிந்த ஜனாப். எஸ் . காஜா நஜ்முத்தீன்.  புன்முறுவலுடன் என்னை நோக்கி வந்தவர் என்னிடம் பேசினார். “அண்ணே எங்கள் வாப்பா அவர்கள் வந்து இருக்கிறார்கள். மதுரையில் ஓரிடத்தில் தங்கி இருக்கிறார்கள்.  வாங்கண்ணே போய் பார்த்து விட்டு வரலாம்” என்று கூறி என்னை மதுரைக்கு அழைத்தார்.  என்னுடைய தொப்பி வீட்டில் இருக்கிறது போய் எடுத்து வருகிறேன் என்று கூறினேன்.  காரணம் மிகப் பெரியார் என்று கூறுகிறார்கள்.  நாம் தொப்பி இல்லாமல் எப்படி அவர்களைப் போய்ப் பார்ப்பது என்னும் உள்ளுணர் வுள்ள மனம் தான். தொப்பிக் கெல்லாம் முக்கியம் கொடுக்க மாட்டார்கள்.  வாங்கண்ணே என்று அழைத்தார்.  பிறகு என் சட்டைப் பையைப் பார்த்தேன்.  பணம் எதுவும் இல்லை.  டிக்கட்டுக்கும் பணம் இல்லை என்றும் கூறினேன்.  நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணே என்று விடாமல் இழுத்துச் சென்றார்.  மிகப் பெரியார் என்றுகூறுகிறார்கள் எப்படி இருப்பார்கள், என நானே கற்பனை செய்து கொண்டு இப்படித்தான் இருப்பார்கள் எனப் பயந்த வண்ணமேபயணம் தொடங்கியது.  மதுரையை அடைந்தவுடன் இந்தவீடாக இருக்குமோ, இந்தவீடாக இருக்கமோ என்று வழியில் இருந்த பெரியபெரிய வீடுகளை எல்லாம் கடந்துசென்றேன்.

எல்லாவற்றையும் கடந்து சென்று இறுதியாக ஒரு சிறிய தெருவில் உள்ள ஓட்டுவீடு தென்பட்டது.  ஜனாப். காஜாநஜ்முத்தீன் ஹக்கிய்யுல் காதிரி அந்த ஓட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.  மதியம் 2 மணி. அனல் பறக்கும் அந்த நேரத்தில் காற்றோட்டம் இல்லாத ஒரு அறையில் மின் விசிறி இருந்தும் ஓடாத நிலையில் ஒருவர் படுக்கும் கயிற்றுக் கட்டிலில் கைலி  பனியனுடன் தலையில் கிருதாவுடன் வேக்காடு தாங்காததால்தலையில்  அணியக் கூடிய தொப்பியையும் கழற்றிவைத்துவிட்டுஉட்கார்ந்து இருந்தார்கள் நமது உயிரினும் மேலான வாப்பா நாயகம் அவர்கள்.

எனக்குப் பெருத்தஏமாற்றம் ஏற்பட்டு அப்படியே இவர்கள் முன் அமர்ந்து இருந்த வாப்பாவின் முரீதுப் பிள்ளைகளுடன்அயர்ந்து உட்காந்து விட்டேன்.  காரணம், நாம் அனைவரும் அறிந்தது தான்.  ஆனால் நான் கற்பனை செய்து கொண்டு போனது பச்சைப்பட்டாடை, தலையில் தலைப்பாகை, கையில் எப்பொழுதும் உருண்டு கொண்டிருக்கும் தஸ்பீஹ் மணி, பாதிமூடி மீதி திறந்து இருக்கும் கண்கள், இறுக்கமான ஜிப்பா, கம்பீரமான வாசனைபூசிய கவர்ச்சிகரமான உருவம் தான்.  நான் வாய்திறக்கவில்லை.  ஏமாற்றத்தால் அப்படியே சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டேன். அங்கு அமர்ந்து இருந்தவர்களில் ஒருவரிடம் “தாங்கள் கல்லூரியில்படித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். குர்ஆன், ஹதீஸ் இன்னும் எத்தனையோ விளக்க உரைகள் இருக்க இங்கு ஏன் வந்து இருக்கிறீர்கள்? என்றும் அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன்.

அந்தக் கல்லூரிமாணவர் “எங்களுக்கு அறிவுப் பசி அதிகம்.  அதற்கானஉணவு எந்த ஆலிம்களிடமும் மார்க்க அறிஞர் என்று கூறிக் கொண்டு இருப்பவர்களிடமிருந்தும்கிடைக்கவில்லை.  அதை நாடித்தான் இவர்களிடம்வந்துள்ளோம்” என்று கூறி  என்னைச் சிறிது சிந்திக்க வைத்து விட்டார். சிறந்த  சிந்தனையாளர்களின் கூட்டம் இது என்பதை உணர வைத்துவிட்டார்  அம்மாணவர். வெளிரங்கத்தை - வெளிவேடத்தை மட்டும் கண்டு வெறுப்படைந்தவனுக்கு ஒரு விழிப்புணர்ச்சிஏற்பட்டது.  பூனை பதுங்குவது போல் பூமி பதுங்கிஉட்கார்ந்து நடப்பதைக் கவனித்தேன்.  அது ஒருவித்தியாசமாகவே இருந்தது.  காரணம் கிணற்றுத்தவளையாக, அந்தக் கிணறு தான் உலகு என்று நம்பி ஏமாற்றம்அடைந்து வெளி உலகத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் சூழ்நிலையில் இருந்தேன்.  இவர்கள் இப்படி எல்லாம் கேட்கும் கேள்விகளுக்குகோபம் அடையாமல்  பதில் வந்து கொண்டிருந்தது.  மேன்மேலும் கேள்விகள் அவர்கள் கேட்கும்பொழுது அவர்களைப்பாராட்டி இப்படித்தான் கேள்விகள் கேட்க வேண்டும் என்று அமைதியாக வாப்பா நாயகமவர்கள்பதில்களை விளக்கமாக கூறிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு அமர்ந்துகேள்விகள் கேட்டுக் கொண்டும் வாப்பாவின் பதில்களைப் பெற்று உரையாடிக் கொண்டும்  இருந்தவர்களையும் கவனித்துவிட்டு வாய்திறக்காமல் வாப்பாவிடம் விடை பெற்றுவிட்டு வந்து விட்டேன்.  இதுதான் என் முதல் சந்திப்பு. சென்னை அணுமின் நிலையத்தில்  (Madras Atomic Power Station) முக்கியப் பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் பொழுது கூட வாப்பாவைப் பற்றிய எண்ணம் என்னைத்தொடர்ந்து கொண்டே இருந்தது.  இருந்த பொழுதும் வாப்பாவை மறுபடியும் சந்தித்துஎன் சந்தேகங்களைக் களைந்து கொள்ள ஓராண்டு காத்துக் கொள்ள வேண்டுமே  என்னும் மனக்குறை மிகைத்து  விட்டது.

அதுவரை பொறுத்துக் கொள்ளாமல் ஒரு கடிதம்  அவர்களுக்கு எழுதினேன்.  “தங்களைச் சந்திப்பதற்கு பல முந்திய வாய்ப்புக்கள்இருந்தும் அவற்றை உபயோகித்துக் கொள்ளாமல் மிகவும் காலம் தாழ்த்திச் சந்தித்தேன்.  அதற்காக வருந்தினாலும் தற்சமயமாவது தங்களைச் சந்தித்தேன்என்று திருப்தி அடைகிறேன்.  கால தாமதம் பண்ணியதற்குக்காரணம் தங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் தொப்பி போடாதவர்களாகவும், தொழுகாதவர் களாகவும் இருக்கிறார்கள் என்பது தான்” .  (தப்லீக்  ஜமாத்தில் இருந்த எனக்கு  இதுதான் முக்கியமான காரணமாக இருந்தது என்று அப்பொழுதுஎண்ணியதை  தற்சமயம் வெட்கத்துடன் குறிப்பிடுகிறேன்.)

இரண்டு வாரங்கள் கழித்து அவர்களின் பதில் வந்தது.                                                       “தொழுகாதவர்கள் என்று குறிப்பட்டது தவறு” சிலர் பள்ளிகளில் மாறி மாறி தொழுகலாம்.  சில சமயம் வீட்டிலும் தொழுகலாம். அதனால் தொடர்ந்து பள்ளிவாசல்களில் நீங்கள் காணாமல் இருக்கலாம். ஆனால் தொழாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல.

மேலும் எங்கள் முரீதுப் பிள்ளைகளைப் பரிசுத்தமாகக் தொழச் செய்துள்ளோம் என்று இரத்தினச் சுருக்கமாக இருந்தது.  என்தவறான கணிப்பை சரி செய்து கொண்டேன்.  வாப்பாநாயகம் வரும் ஆண்டுகளெல்லாம் எப்படியாவது சந்தித்து என் சந்தேகங்களைத்தீர்த்துக் கொள்வேன்

மேலும் என் நண்பர் ஒருவர் இஸ்லாத்தில் சேருவது பற்றியும் தன்பெயர்  மாற்றம் பற்றியும் இறந்தபின் எரிப்பது பற்றியும்சந்தேகங்களைத் தெரிவித்தார். அதற்கெல்லாம் அறிவுப்  பூர்வமான பகுத்தறிவுமிக்க வாப்பா அவர்களின் கேள்விகளும்  பதில்களும் என்னை மிகவும் சிந்தித்துக் கொண்டே இருக்கவைத்து விட்டது.  அதன்  பிறகு பல்லாண்டுகள் வாப்பா அவர்களின் வருகையை எதிர்பார்த்து சென்னை வரும் போதெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் இறைமறையின் உள்ரங்கமான அர்த்தங்களையும் அறிவுப்பூர்வமான விளக்கங்களையும் நாம் எதற்காக உதயமானமோ அதை அறிவதற்கும் வாய்ப்புப் பெற்றேன்.

இதில் சிந்திக்க வேண்டிய கருத்து என்ன? என்பதை இக்கட்டுரையின்இடையே குறிப்பிடுவது என் ஆத்ம சகோதரர்களுக்குத் தேவை இல்லை.  மற்றவர்களுக்கும் புரியும் என்று கருதுகிறேன்.

அல்லாஹ்வே இது நியாயமா? அரபியர்களுக்கு மட்டும் சாதகம் செய்துவிட்டாயேஎன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளைப் பேசும் மக்களில் சிலருக்குக் கேட்க தைரியம் வராவிட்டாலும் உள்ளத்தில் இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.  ஆக ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பல மேதைகள் இருக்கத்தான்செய்வார்கள்.  ஆனால் நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேரரையேகரம் பற்றி விட்டோம். அல்லாஹ்விடம் யாரைக் குறிப்பிட்டேனோ அவர்களின் 34 ஆவது   தலை முறையினரையேபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அருங்குணத்தையும் நடத்தையையும் அப்படியே பெற்று என் தாய்மொழியிலும் பாண்டித்துவம்பெற்று இறைமறை மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறை ஆகியவற்றின் உள்ரங்கத்தையும் விளக்கிக் கூறக் கூடிய மெய்ஞ்ஞானி ஒருவரை நான் வாழும் காலக்கட்டத்தில்வாழவைத்து என்னை அல்லாஹ்விடம் கேள்வி கேட்க வைத்து விட்டு சிறிது நேரத்திலேயே ஒருவரை என்னை நோக்கி அனுப்பி எவ்வித பணச் செலவும் பயணக்களைப்பும் இல்லாதவாறு உடனடியாக குத்புஸ்ஸமான்­ம்ஸுல் வுஜுது ஜமாலிய்யா கலீல் அவ்ன் அல்ஹாஷிமி நமது வாப்பா நாயகம் அவர்களைக்காட்டிக் கொடுத்தது சாதாரணமான காரியமா?

அத்தகைய மேதை “இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம் பின்வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையில் நடைபெறும். எம்மை இந்தக் காலத்தில் (அண்டியவர்கள்) சந்தித்தவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.  மற்றவர்கள் கைசேதப்பட்டவர்கள்.  இதுவே இறையின் நன்மாராயம் ஆகும்” என்று கூறுகிறார்கள் என்றால் நாம் பெரும் பேறு பெற்றவர்கள் என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதேஅல்லாஹ் முன் அறிவிப்பு செய்து விட்டது சாதாரண காரியமா?

ஒரு பாமரர் எதையாவது பேசுகிறார்என்றால் இந்தக் காதில் வாங்கி  அந்தக் காதில்விட்டு விடலாம்.  ஒரு மாபெரும் மேதை.  அதுவும் பெருமானார்  சந்ததியில் வந்தவர்கள்.  அரபு, தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம்பெற்றவர்.  “புதூஹாத்துல் மக்கியா” என்னும் ஞான விளக்க நூலை எழுதி ஞானப் புரட்சி செய்த சைய்யிதுனா இப்னு அரபி (ரலி) இக்காலத்தில் வாழ்ந்தால்   நிச்சயம் எம் வீடு நோக்கி வந்திருப்பார்கள்” என்று பிரகடனப் படுத்துகிறார்கள்என்றால் இத்தகைய மேதை வாழும் காலத்தில் நான்  வாழ்வதற்கு திட்டமிட்டு என்னை வெளிப்படுத்திய இறைக்குநான் என் உள்ரங்கம் வெளிரங்கமாக செலுத்திக் கொண்டிருக்கும் நன்றி என் வாழ்நாள் எல்லாம்போதாது போதாது என்னும் குறிப்புடன் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

 

M. Sakkarai Mohammed.

Ex.Scientific Officer, Dept of Atomic Energy, kalpakkam- 603 102