ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  விண்ணைத் தாண்டி வருவீரே!


திருமறை ஓர் அறிவியல் அதிசயம்.


விண்ணைத் தாண்டி வருவீரே!


    மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம் ; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடைய வனாவோம்.

(சூரா அத்தாரியாத் : வசனம்47)


    நாம் வாழும் பூமிப் பந்தானது நமது  சூரியக் குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும்.  நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.


    நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப் போன்று கோடான கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன.  இரவில் வானத்தை அண்ணாந்து பார்த்து, நட்சத்திரங்களின் அழகைக் கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.


    நம் விழிகளில் வியப்பைத் தேக்கிவைக்கும் இவ்வழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் கட்டுக்கோப்பும் இன்றிவானில் சிதறிக் கிடப்பதில்லை.  அவை ஒரு கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்ப்படிந்து இயங்கி வருகின்றன. மனித வாழ்வில் காணப்படும் ஒழுங்கமைப்பையும் கட்டுக்கோப்பையும் விட அலாதியானதோர் ஒழுங்கமைப்பு, கட்டுக்கோப்பு, அமைதி, எல்லை பிறழாமை ஆகிய தன்மைகளைக் கொண்டதாக இந்த நட்சத்திரத் தொகுப்பு விளங்குகின்றது. எல்லையில்லாமல் அகண்டு விரிந்து கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன.  சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்பு கொண்டவை.  ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன!


    அறுந்துவிட்ட முத்து மாலையைப்  போன்று, விண்ணில் விழி சிமிட்டும் இந்த வெள்ளித் தாரகைகள், அங்கிங்கெனாதபடி எங்கும் சிந்தி சிதறிக் கிடப்பதாகவே நம் ஊனக் கண்களுக்கு புலப்படுகின்றன.


    வானத்தை ஆராய்ந்து, அதன் அண்டபரிமாணங்களை எல்லாம் அளந்து பார்க்கும் அபார முயற்சியில் விஞ்ஞானிகள் களம் இறங்கியபோது,விண்மீன்களின் அற்புதமான வாழ்க்கை அமைப்பைப் பற்றியும் அவற்றின் தன்மைகளைப் பற்றியும்உலகம் பல வியப்பான உண்மைகளை அறிந்து கொண்டது.


   வானம் எத்தனை கோடி நட்சத்திரங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதை எந்த விஞ்ஞானியும் இதுவரை துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியதில்லை.  மிகப் பிரபல்யமான விஞ்ஞானியாகத்  திகழ்ந்த சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவர் தனது (புதிர் நிறைந்த பிரபஞ்சம்) என்னும் உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.


    உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.  இப்பேரண்டத்தில் பொதிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்துபார்ப்போமெனில், அது விண்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.


    ஒரு விண்மீன் கூட்டத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளனவாம். நாம் வசித்து வரும் விண்மீன் கூட்டத்தை பால் வீதி, ஆகாய கங்கை என்றெல்லாம் பைந்தமிழில் கூறிடுவர்.  இதனை ஆங்கிலத்தில் “மில்கிவே” என்கின்றனர்.  மில்கிவே கேலக்ஸியில் உள்ள பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு சிறிய நட்சத்திரம் தான் சூரியன்.    சூரியனைச் சுற்றி ஒளி உமிழா கோள்கள் சுழன்றோடி வருகின்றன. 


    சூரியக் குடும்பத்தில் ஒரு முக்கியக் கோளாய் திகழ்வதே நாம் வசிக்கும் பூமி.  இவ்வாறு சூரியக்குடும்பங்கள் ஒன்றல்ல, பல உள என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. மில்கிவே கேலக்ஸிக்கு அடுத்துள்ள அண்டை வீட்டு கேலக்ஸிக்கு அண்ட்ரோமிடா கேலக்ஸி என்று   பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் நாற்பதாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நமது கேலக்ஸியிலிருந்து இந்த கேலக்ஸிக்கு பயணம் போக வேண்டுமானால் 25 லட்சம் ஒளியாண்டுகள் தேவைப்படுமாம்.  ஒளி  ஒரு வினாடிக்கு 186,300 மைல் பிரயாணம் செய்கின்றது. ஓர் ஆண்டில் ஒளி பிரயாணம் செய்யக்கூடிய தூரத்திற்குத்தான் ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.  அப்படியானால்,நமது வருடக் கணக்கின்படி, அண்ட்ரோமிடா கேலக்ஸியைப் போய்ச் சேர எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.


    பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு விண்மீன் குழுவைப் போன்று, இந்தப் பேரண்டத்தில் பத்தாயிரம் கோடி விண்மீன் குழுக்கள் - கேலக்ஸிகள் இருப்பதாக மற்றொரு வியப்பான தகவலை விஞ்ஞானிகள் தருகின்றனர்.


    விண்மீன் கூட்டங்கள் யாவும் ஒன்றைவிட்டு மற்றொன்று எண்ணிப் பார்க்கவே முடியாத, அதியற்புதமான மின்னல் வேகத்தில் விலகி ஓடுகின்றன!


    நட்சத்திரக் கூட்டங்கள் யாவும் பால்வீதியில் அமைந்துள்ள நமது கோளக் குடும்பத்தின் பார்வையிலிருந்து வேகமாக மறைந்துவருகின்றன!


    ஆரண்யத்தில் விரைந்தோடும் புள்ளிமான் கூட்டமென இந்த அண்டப்பெருவெளியில் விலகியோடும் விண்மீன் கூட்டங்களுக்கு என்ன நிகழ்கின்றன?என்பது நமது அறிவின் எல்லைக்கு எட்டுவதே இல்லை!


    இவ்வாறு விரைந்தோடும் விண்மீன் கூட்டங்களுக்கிடையே மையக் கேந்திரமாய் பேரண்டப் பெருவெளியில் அமைந்திருப்பது  பால்வீதியே என்று விண்ணியலாளர்கள் வியக்கின்றனர்.

    

    வியப்பும் மலைப்பும் தோன்ற அகண்டாகாரமாக விரிந்து காணப்படும் அற்புதமான பேரண்ட அமைப்பை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பறைமுழக்கிக் கொண்டுள்ளன என்பதை உணர்வோம்.


    நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத்  தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம்அவர்களுக்குக் காண்பிப்போம்.


(சூரா ஹாமீம்ஸஜ்தா, வசனம் : 53)

தகவல் : ரஹ்மத் மைந்தன் ய.ளீலிது.,திருச்சி


பாரதத்தின் அபார சாதனை!


    முழுவதும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, அண்மையில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி 21 தான் நாட்டின் நூறாவது ராக்கெட். இதன் மூலம் நூறு ராக்கெட்டுகள் செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்.


    715 கிலோ எடை கொண்ட பிரான்ஸின் ஸ்பாட் - 6, ஜப்பானின் ப்ராய்ட்டர் சாட்டி லைட்டுகளையும், பி.எஸ்.எல்.வி. சி 21 சுமந்துசென்றது.  ராக்கெட் ஏவப்படுவதைப் பார்ப்பதற்கென்றே பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் 25 பேர் இஸ்ரோ வளாகத்திற்கு வந்திருந்தது கூடுதல் ஆச்சரியம்.


    வெளிநாட்டு சாட்டிலைட்டுகளை விண்ணுக்குக்கொண்டு செல்லும் ராக்கெட் தொழில் நுட்பத்தை இஸ்ரோ 1999லேயே  தொடங்கியிருக்கிறது.  இதில் வணிகம், கல்வி, விவசாயம், வானிலை உள்ளிட்ட துறைகளுக்காக இன்று வரை 37 நாடுகளின் சாட்டிலைட்டுகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இஸ்ரோவின் அடுத்த திட்டம்... செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தான்.  இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்? அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.  2013-ஆம் ஆண்டின் இறுதியில் அது நிறைவேற்றப்படும். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து விட்டது என்கிறார் நம்பிக்கையுடன்!


தகவல் : A.M.J. ஸாதிக், B.B.A., திருச்சி