Jamia Yaseen Arabic CollegeYoutube channel:Dubai emsabai blogs:emsabai.blogspot.comChennai emsabai blogs:emschennai.blogspot.comKuwait emsabai blogs:emskuwait.blogspot.com |
நெடுந்தொடர் ....
மகளிர் பக்கம்
நல்ல பெண்மணி
( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு - எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)
வீட்டில் பயிற்சி....
இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்ந்து அவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக்க அல்லாஹ் ஏவியவற்றைப் புரிய வேண்டும் என்றும், விலக்கியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துங்கள்! முதலில் ஐம்பெரும் கடமைகளைப் பற்றிக் கூறி அவர்களைத் தொழத் தூண்டுங்கள்! ஏழு வயது ஆகிவிட்டால், தொழாமல் இருக்கக் கூடாது என்றும் எச்சரியுங்கள்! நீங்கள் தொழுகைக்காக உளூ செய்யும் போது அவர்களையும் அருகில் அமர்த்தி உளூ செய்யச் சொல்லுங்கள்! நீங்கள் தொழும்போது அவர்களையும் உங்கள் அருகில் நிறுத்தித் தொழச் செய்யுங்கள்!
குழந்தையின் தந்தை ஜுமுஆ தொழுகைக்குப் போகும் போது அவசியம் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள்! ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க நீங்கள் எழும்போது, குழந்தைகளையும் எழுப்பிவிட்டு, அவர்களையும் ஸஹர் பண்ணச் செய்யுங்கள்! குழந்தைகளுக்கு நோன்பு வைப்பதில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தை முதன் முதலாக நோன்பு வைத்தால் அதனை ஒரு சிறு விழாவாகக் கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, சக்திக்கு ஏற்ப நோன்பு வைக்கக் கூறுங்கள்! குழந்தைகளிடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றும் மக்கா சென்று ஹஜ்ஜுச் செய்ய வேண்டும் என்றும் கூறி, அவற்றில் ஆர்வத்தை இளவயதிலேயே ஏற்படுத்தி விடுங்கள்!
நல்ல தன்மையுள்ள குழந்தைகள் பெற்றோர்களுக்கு அரிய பொக்கிஷம் போன்றவர்கள் ஆவர். ஒரு நன்மகன் மக்களுக்கு ஒரு கிணற்றைப்போன்று நிலையான தர்மம் (சதகத்துன் ஜாரியா) ஆவான். கிணறு; வெட்டியவர்களுக்கும் நீர் கொடுக்கும். மற்றவர்களுக்கும் நீர் கொடுக்கும். ஒரு நன்மகன், பெற்றவர்களுக்கும் நன்மையாக இருப்பான், மற்றவர்களுக்கும் நன்மையாக இருப்பான். ஒரு கிணறு நிலையாக நீர் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு நன்மகன் நிலையாக நன்மை செய்து கொண்டிருப்பான். அதன் நன்மையால் பலன் பெறுபவர்கள் அவனையும் வாழ்த்துவார்கள். அவனைப் பெற்றவர்களைப் புகழ்வார்கள். அதனால் தான் ஷைகு சஅதி (ரஹ்) அவர்கள் கூறினர், “உங்கள் பெயர் நிலைக்க விரும்பினால், பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!”என்று. குழந்தைகள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் விலை மதிக்க முடியாத மூலதனங்கள் ஆவர். எனவே அவர்களின் ஒழுக்கம்உயர்தரமானதாய் இருக்க வேண்டும்.
அதற்கான பயிற்சியை அவர்களுக்கு இளம் வயதிலேயே அளித்துவிட வேண்டும். இன்றையக் குழந்தைகள் தாம் நாளைய உலகின் குடிமக்கள் ஆவர். அவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் உலகம் இருக்கும். அவர்கள் நல்லவர்களாயிருந்தால், உலகமும் நல்லதாக ஆகிவிடும். அவர்கள் கெட்டவர்களாக இருந்தால்,உலகமும் கெட்டு விடும். எனவே நாளைய உலகம் நல்லதாக இருக்க வேண்டுமானால் இன்றையக் குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும்.
பல விஷயங்களைக் குழந்தைகள் தாய், தந்தையிடமிருந்து, குறிப்பாகத் தாயிடமிருந்து தான் கற்றுக் கொள்கின்றனர். அதனால் தாய் தந்தையர் தம்மிடம் நல்ல பழக்கங்களை, வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்லது, குழந்தைகளுக்கும் நல்லது. சிறு குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் பள்ளி முறையை அறிமுகப்படுத்திய புரோபெம்லுன் கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? வாருங்கள்! நாம் குழந்தைகளுக்காக வாழுவோம். இதன் பொருள், குழந்தைகளுக்காக வேண்டியாவது நாம் நல்லவர்களாக வாழ்வோம் என்பதாகும். நான்கு சுவர்களுக்குள் பெற்றோர் பேசுவதைத் தான் குழந்தைகள் தெருவில் போய்ப் பேசுகின்றனர் என்று கூறுவதுண்டு, எனவே பெற்றோர்கள், தாமும் குழந்தைகள் அருகில் வைத்துக் கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது, பிறரையும் குழந்தைகள் அருகில் வைத்துக் கெட்டவார்த்தைகள் பேச அனுமதிக்கக் கூடாது. (இன்னும் வருவாள்)
All rights reserved.