ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​ துறவு -  ஹலால் -  இறை திருப்தி


துறவு -  ஹலால் -  இறை திருப்தி

கலீபா பு. முஹம்மது காசீம், ய.றீஉ., னி.சிd., பெரம்பலூர்.

 

    பூ சுலைமான் தாரானி (ரஹ்) அவர்கள் ஹலால் ஆன நேரிய உணவை உண்பதில் பெரிதும் அக்கரை எடுத்துக் கொண்டார்கள்.  “எனக்கு நேரிய (ஹலாலான) உணவு இரவில் கிடைப்பின் பகலெல்லாம் வணங்குவதை விட அதனையே மேலாக நான் கருதுவேன்” என்று அவர்கள் ஒரு முறை கூறினர்.


    மற்றொரு முறை அவர்கள் “இறை நம்பிக்கையாளரின் இதயம் திருப்தியுற்று நன்முறையில் மறுமைக்காக வணங்குவதற்கு அவருடைய வயிற்றில் நேரிய வழியில் ஈட்டப்பட்ட உணவு இருப்பது இன்றியமையாததாகும்” என்று எடுத்துரைத்தார்கள்.


    “மனிதனின் மேலான செயல் அவன் தன் ஆசையை எதிர்த்து நிற்பது தான்”என்று அவர்கள் கூறினர்.  மேலும் அவர்கள் அதைப்பற்றிக் கூறும் பொழுது “ஒருவன் தன் உள்ளத்திலிருந்து ஆசையை அகற்ற மனப்பூர்வமாக விரும்பின், இறைவன் அவனுடைய உள்ளத்திலிருந்து அதனை அகற்றுகின்றான். ஆனால், அவனே, எவனுடைய உள்ளத்தில் ஆசையை வைத்தானோ,அவன் அவ்வாசையைப் பெற்றிருந்த தற்காகத் தண்டித்து அநியாயம் செய்யமாட்டான்” என்று தமக்குத் தாம் ஆறுதல் கூறிக் கொண்டார்கள். அவர்கள் உடைகளை மூன்று விதமாகப் பிரித்தார்கள்.


1. முற்றிலும் இறைவனுக்காகவே அணியப்படும் உடை;  அது ஒருவன் தன் மறைவான உறுப்புகளை மறைப்பதற்காக அணிந்து கொள்ளும் உடையாகும்.


2. ஆசைக்காக அணியப்படும் உடை;  மென்மையான உடைகளை அணிய மனம் ஆசைப்படுகிறது.  அந்த ஆசையைத் திருப்திப்படுத்துவதற்காக ஒருவன் மென்மையான உடைகளை அணிந்து கொள்கிறான்.


3. அழகுக்காக அணியப்படும் உடை;  நவநவமான வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் காட்சியளிக்கும் உடைகளை அணிந்து கொண்டு ஒருவன் உல்லாசமாக அங்குமிங்கும் திரிகிறான் என்று அவர்கள் கூறினார்கள்.


    இவற்றில் முதலாவதாக உள்ள உடையையே விரும்பி அணிந்த அவர்கள் ஒருவன் தன்னை சூஃபி என்று காட்டிக் கொள்வதற்காக கம்பளி உடை அணிந்து திரிவதைக் கூட வெறுத்தனர். ஒருவர் அத்தகு முறையில் கம்பளி உடை அணிந்து கொண்டு திரிவதைக் கண்ட அவர்கள்,“நீர் துறவிகளின் உடையை பகட்டுக்காக அணிந்து கொண்டு திரிகின்றீரா என்ன? கம்பளி உடை அணிந்தால் மட்டும் உமக்கு மதிப்பு வந்து சேர்ந்து விடுமா என்ன? என்று கோபித்துக் கொண்டார்கள்.” அவர் யாதும் பதிலுரைக்காது  மெளனமாயிருப்பதைக் கண்ட அவர்கள், அவரைக் கழிவிரக்கத்துடன் நோக்கி “இனிமேல் உம்முடைய வெளிப்புறம் பருத்தி நூல் உடையாகவும் உட்புறம் கம்பளி உடையாகவும் இருக்கட்டும்” என்று அறிவுரை பகர்ந்தார்கள்.


    “ஒரு துறவி (பக்கீர்) உடைய உடையின் தூய்மை அவரின் உள்ளத் தூய்மையைவிட அதிகமாக இருக்கக் கூடாது.  அவரின் வெளிக்கோலம் அவரின் உள்ளத்தின் கோலம் போன்றே இருக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.  ஒரு நாள் அவர்கள் வெண்மையான ஆடை ஒன்றை அணிந்தனர். அப்பொழுது அவர்கள் தம்மை நோக்கி, “என் இதயமும் இவ்வாறிருந்தால் எத்துணை நலமாயிருக்கும்” என்று கூறினர். துறவு பற்றி அவர்கள் கூறும் பொழுது “நான் பல பெரியார்கள் வாயிலாகத் துறவு பற்றிய விளக்கத்தைக் கேட்டுள்ளேன்.  ஆனால் துறவு பற்றிய என்னுடைய கருத்து யாதெனில் “ஒருவன் தன்னை அல்லாஹ்வை விட்டும் அப்புறப்படுத்தும் அனைத்தையும் விட்டொழிப்பதேயாகும்” என்று கூறினர். இவ்வாறு கூறிவிட்டுத் தாம் கூறுவதற்கு ஆதாரமாக “இல்லா மன் அதல்லாஹ பி கல்பின்சலீம்” (தூய உள்ளத்துடன் அல்லாஹ்விடம் வருபவன் தான் மோட்சமடைவான்) என்ற திருவசனத்தை ஓதி “இங்குத் தூய உள்ளம் என்பது இறைவனைத் தவிர உள்ள வேறு யாதொரு எண்ணத்தையும் பெற்றிராத உள்ளம்” என்று அவர்கள் விளக்கம் பகர்ந்தார்கள்.


    துறவை; கடமையானது, விருப்பத்தைப் பொறுத்தது, எளிதானது என மூன்று வகையாகப் பிரிக்கலாம்” என்று கூறிய அவர்கள், “ஒருவனின் உள்ளத்தை இறை நினைவிலிருந்து திருப்பும் அனைத்தும், அவனுடைய உடைமைகளும், மனைவி, மக்களும் கூட அவனுக்குத் துன்பம் பயப்பனவேயாகும்” என்று கூறினார்கள். “உடைமைகளும் மனைவி மக்களும் என்ன? சுவனத்தையும் அதிலுள்ள இன்ப சுகங்களையும் வெறுத்துத் தள்ளியவர்களும் கூட மனிதர்களில் இருந்தார்கள்,அத்தகையோரை இவ்வுலகத்தாரும், இதிலுள்ள இன்ப சுகங்களாலும் என்ன கவர்ச்சி செய்ய இயலும்?”என்று அவர்கள் கூறினார்கள்.


    திருமணம் செய்து கொள்வதில் கூட ஒருவன் துறவு மனோ நிலையை மேற்கொள்ளலாம்.  “அது  என்னவெனில்,செல்வர் மகளையோ அழகு மங்கையையோ தேடித்திரியாது அழகற்ற பெண்களையோ அநாதைப் பெண்களையோ மணமுடித்துக் கொள்வதேயாகும்” என்று அவர்கள் கூறினர்.


    ஒரு நாள் அவர்கள் தம் மாணவர்களை நோக்கி, “மாண்புமிகு அல்லாஹ், தன் அடிமைகளில் எவன் தன்பால் திருப்தியுடன் உள்ளானோ அவன் பால் அவனும் திருப்தியுடன் உள்ளான்” என்று கூறினர்.  அப்பொழுது மாணவர்களில் ஒருவர் அவர்களை நோக்கி, “அது எவ்வாறு?” என்று வினவினார்.  அதற்கு அவர்கள் ஓர் அடிமை தன் எசமானன் தன் மீது திருப்தியுடன் இருக்க வேண்டுமென்று  விரும்புவதில்லையா? என்று வினவினர்.  “ஆம்” என்றார் அவர். “அதே போன்று இறைவனும் உம்மீது திருப்தியுறும் வண்ணம் நீரும்இறைவன் விட்ட விதியை மனநிறைவுடன் ஏற்று அவன் இட்ட கட்டளைகளைச் சிரமேற்றுச் செயலாற்றி வருவீராக! அதுவே நீர் அவனுடன் திருப்தியுற்றிருப்பதற்கு அடையாளமாகும்.  அவ்விதம் நீர் செய்யின் இறைவனும் உம்மீது திருப்தியுறுவான்“என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.


    மற்றொருவர் அவர்களிடம் வந்து அறிவுரை வேண்டிய பொழுது “உமக்கு என்னதான் ஏற்படினும் பொறுமையாய் இரும். இறைவனாலன்றி வேறு எவராலும் உமக்கு எத்தகு தீங்கும் செய்ய இயலாது என்பதை உணரும்” என்று அவர்கள் கூறினர்.


    இறைவன் விட்ட விதியை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வது போன்ற மாண்பாரும் பண்பு வேறொன்றுமில்லை என்பது அவர்களின் கருத்தாகும்.  எனவே தான் “இறைவன் அனைத்து மக்களையும் சுவனம் புகச்செய்து விட்டு, என்னை மட்டும் நரகப் படுகுழியில் தூக்கி எறிந்தாலும் நான் மனநிறை வோடிருப்பேன்”என்று அவர்கள் ஒரு தடவை கூறினார்கள்.


    ஒரு தடவை அவர்கள் தம்மாணவர்களை “நோக்கி என்னுடைய நஃப்ஸை நான் கேவலமாக ஆக்கியது போன்று உலகத்தார் என்னை அத்துணைக் கேவலமாக ஆக்க இயலாது” என்று கூறினர்.


    அவர்கள் ஷ­ரீஅத்தை அணுவத்தனையும் பிசகாது பின்பற்றி வந்தார்கள்.  எனவே ஒரு தடவை அவர்கள் தம் மாணவர்களை நோக்கி “சூஃபிகளுடைய வார்த்தைகளை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.  அவற்றிற்கு இரண்டு சாட்சிகள் இருக்கும் வரை, அந்த சாட்சிகளில் ஒன்று, இறைவனின் திருமறையாகிய அல்குர்ஆன்.மற்றொன்று இறுதி நபியின் சொல்லும் செயலுமாகிய அல்ஹதீஸ் என்று அவர்கள் கூறினார்கள்.”  மெய்ஞ்ஞானிகளுக்கு அகக்கண் திறந்ததும் வெளிக்கண் பார்வை இழந்து விடுகிறது.  எனவே அவர்களுடைய கண்களுக்கு இறைவனைத் தவிர வேறுயாதொன்றும் தென்படுவதில்லை என்று அவர்கள் கூறினார்கள்.


    “இறையண்மையை எய்தப் பெறுவதற்குச் சிறந்த வழி யாது?“ என்று அவர்களிடம் வினவப்பட்டதற்கு “இறைவன் ஒருவனின் உள்ளத்தை நோட்டமிடும் பொழுது அதில் அவன் இம்மையிலும் மறுமையிலும் விரும்புவது இறைவனைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க வேண்டும். இது தான் இறையண்மையை எய்த விரும்பும்  உண்மையான இறை நேசர்களின் அடையாளமாகும்.  அவர்கள் செய்வது அனைத்தும் இறைவனுக்காகவே இருக்கும்.”என்று அவர்கள் பதிலிறுத்தார்கள்.


    “ஓர் ஏழை, ஒரு பொருளைப் பெரிதும் விரும்பி அதனை அவனால் அடைய முடியாத பொழுது, அவன் ஏக்கத்தாலும் துன்பத்தாலும் விடுகிற ஒரு பெருமூச்சானது.  செல்வந்தனின் ஆயிரம் ஆண்டு வணக்கத்தைவிட மேலானதாகும்” என்று அவர்கள் கூறினர்..“ஒருவன் தன் வயதை வீணாகச் செலவழித்து விட்டதற்காக அழுவானாயின் அந்த அழுகை அவன் இறக்கும் வரையில் அவனுக்குப் போதுமானதாயிருக்கும்” என்று அவர்கள் கூறினார்கள்.மேற்கண்ட நிகழ்வுகளைக் கவனிக்கும் போது ஏக இறை நமக்கு உண்மையான துறவு நிலையையும், அவனது முழு திருப்தியையும் தந்து அருள் புரிவானாக, என நாமும் பிரார்த்திப்போம்!