ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​   தீன் ஒளி பரப்பிய திக் விஜயம்!


வரலாறு

தீன் ஒளி பரப்பிய திக் விஜயம்!


-மர்ஹூம் ஏ.கே. ரிஃபாயீ அவர்கள்-


    கிருஸ்தவ மதபோதகர் பிரான்ஸிஸ் சேவியர் கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் மத்திவாக்கில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கடற்கரை பட்டணங்கள் நெடுகிலும் மார்க்கப் பிரச்சாரங்களை மேற்கொண்டார். அவரது சமயப் பிரச்சாரம் முடிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குள்ளாக, இஸ்லாமிய மகான் ஒருவர் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்து தீன் பணியை மேற்கொண்டார்கள்.  அப்பெரியார் தான் அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீது மீறான் அப்துல்காதிர் (ரலி) ஆவார்கள்.  தமிழ் நாட்டின் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் ஷாஹுல்ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாகூர் நகரில் வந்து தங்கி இருந்து தங்களது திருப்பணியை தொடர்ந்தார்கள்.  இந்நகரில் அவர்கள் சுமார் 28 ஆண்டுகள் தங்கினார்கள்.


    கி.பி. பதினொன்றாவது  நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்த நத்ஹர் ஒலியுல்லாஹ் அவர்கள் திருச்சி நகரிலேயே தங்கி இருந்து தங்களது பிரச்சாரத்தைச் செய்து வந்தார்கள். “கலந்தர்கள்” என்ற போதகர்களை உருவாக்கி தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறே மதுரை நகரில் வாழ்ந்து வந்த அலியார்ஷா என்ற பெரியாரும் அந்நகரில் இருந்து கொண்டே தங்களது பணியைத் தொடர்ந்தார்கள்.  பாபா பக்ருத்தீன் அவர்கள் தமிழ் நாட்டில் கொஞ்சகாலம் இருந்து விட்டு ஆந்திரா பகுதிக்குச் சென்று விட்டார்கள். தமிழ்  நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர்கள் சென்று வந்ததாகத் தெரியவில்லை; அல்லது தெரிந்து கொள்ள முடிய வில்லை. சுல்தான் செய்யது இப்றாஹீம் அவர்கள் அரச பரிபாலனம் செய்து கொண்டே தீன் பணியையும் செய்தார்கள். முகவை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் மட்டும் அவர்கள் செயல் பட்டதாக அறிய முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டின் பெரும் பகுதியிலும் தீன் பிரச்சாரத்திற்காகவே சுற்றுப்பயணம் செய்து பல நகரங்களிலும் தங்களது சகாக்களுடன் முகாம் இட்டு சமயப்பணி செய்த சிறப்பு முதன் முதலாக, ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் (ரலி)அவர்களையே சாரும்.


    வட இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணிக்கப்பூர் என்னும் ஊரில்  இம்மகான் ஹிஜிரி 910ஆம் ஆண்டில் பிறந்தார்கள்.  செய்யது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள்.  அதாவது நபிகள்  திலகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழித்தோன்றல்களில் உதித்தவர்கள். பதினெட்டாவது வயதிலேயே தங்களது ஞானாசிரியரைத் தேடிப் புறப்பட்டு விட்டார்கள். குவாலியர் நகரில் அச்சமயம் வாழ்ந்து கொண்டிருந்த அஷ்ஷெ­ய்க் முஹம்மது கவுஸ் என்ற ஞானாசிரியரிடம் மாணவராகச் சேர்ந்து சுமார் பத்தாண்டுகள் குருகுலவாசம் செய்தார்கள்.  பின்னர் தங்களது குருவின் அனுமதி பெற்று ஹஜ் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டார்கள்.


    முதலில் அஜ்மீர் நகருக்குச் சென்றார்கள்.  காஜா முயீனுத்தீன் சிஷ்தி என்ற ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களது அடக்கத்தலம் அங்குதான் உள்ளது. வட  இந்தியாவில் கி.பி. பன்னிரெண்டாம்- பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் தீன் பிரச்சாரம் செய்த மகான் அவர்கள்; வலிய்யுல்ஹிந்த் என்ற சிறப்புப் பெயரால் இன்றளவும் அன்புடன் அழைக்கப் படுபவர்கள். ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் அஜ்மீர் நகரில் கொஞ்ச காலம் தங்கி விட்டு அங்கிருந்தபடியே பாரசீகம் வழியாக அரேபியா நோக்கிப் புறப்பட்டார்கள். மக்கா, மதீனா நகர்களுக்குச் சென்றார்கள்.  புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.  ஏழு ஹஜ்களை அவர்கள் செய்து முடித்ததாகத் தெரிகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது ஜியாரத்தையும் செய்து முடித்தார்கள்.


    அரேபியாவிலிருந்து கடல் மார்க்கமாக முஹல்ல தீவுக்கு வந்தார்கள்; பின்னர் இலங்கைத் தீவுக்குச் சென்றார்கள். அங்கு சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் வந்து இறங்கினார்கள். கீழக்கரை, காயல்பட்டினம்,  எக்ககுடி, குளச்சல், பொதிகை மலைப்பகுதி, தென்காசி, மேலப்பாளையம், நத்தம், ஆயக்குடி,  மதுரை, திருச்சி, பண்டாரவாடை, தஞ்சை, திருவாரூர், திருக்களாச்சேரி, கூத்தாநல்லூர்,  திட்டச்சேரி என பல ஊர்களுக்கும் அம்மகான் விஜயம் செய்தார்கள். ஏக தெய்வக் கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னார்கள். அவர்களுடன் எப்பொழுதுமே நூறு, இருநூறு என்று தோழர்கள் இருப்பார்கள்; பக்கீர்மார்கள் இருப்பார்கள்.  செயற்கரிய செயல்கள் பலவற்றை அம்மகான் செய்து காட்டியிருக்கிறார்கள். அதன் காரணமாக மக்களும் கவரப்பட்டார்கள்; ஆட்சியாளர்களும்  கவரப்பட்டார்கள். எல்லோருமே அவர்களிடம் பெரிதும்மதிப்பு, மரியாதை வைத்திருந்தார்கள்.  ஷாஹுல் ஹமீது நாயகம் சென்ற ஊர்களில் எல்லாம் அக்காலத்திலேயே முஸ்லிம் மக்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அம்மக்கள் தாம் இந்த ஒலியுல்லாஹ் அவர்களை வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்; அன்னாரின் ஏக தெய்வக் கொள்கை பிரச்சாரத்தின் மூலமாக ஏனையோரும் திரளாக தீனுல் இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள முன் வந்தனர்.  பல்வேறு தரப்பட்ட மக்களின் குறைகளையும் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதில் அம்மகான் உதவி செய்தார்கள். இவர்களது மகிமையை உணர்ந்த மக்கள் கூட்டங்கூட்டமாக தீனுல் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகை தந்த பொழுது, இப்பகுதியை முஸ்லிம் மன்னர்கள் அரசாண்டு கொண்டிருக்கவில்லை. நாயக்க மன்னர்களது ஆட்சியே இம்மண்ணில் நடைபெற்றுவந்தது. மதுரையில் நாயக்கர்களின் ஆட்சியை ஆரம்பித்து வைத்த விஸ்வநாத நாயக்கரின் பேரன் வீரப்பநாயக்கன் அரசாட்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் நாகூர் ஆண்டகை அவர்கள் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்கள்.


    வீரப்ப நாயக்கனின் காலம் கி.பி. 1572 முதல் 1559வரையாகும். இம்மன்னர் கிருஸ்தவர்கள் விஷ­யத்திலும் தாராளமாகவே நடந்து கொண்டார். மதுரையில் கிருத்துவ பிரச்சாரக் கூடம் ஒன்றை அமைக்க போர்ச்சுகீசியர்களுக்கு இந்த நாயக்க மன்னர் அனுமதி வழங்கினார்.  அப்பொழுது தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்து வந்தவர், சேவப்ப நாயக்கரின் குமாரன் அச்சுதப்ப நாயக்கர் என்பவராகும். தஞ்சை அரசன் அச்சுதப்பனுக்கு ஏற்பட்டிருந்த தீராதவியாதி நாகூர் ஆண்டகை அவர்களின் துஆவினால் பூரண குணமடைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  நாகூரில் அம்மகானவர்கள் தங்களது ஜாகையை அமைத்துக் கொள்ள தஞ்சை மன்னன் தக்க உதவிகளைச் செய்து கொடுத்திருந்தான்.


    நாகூர் ஆண்டகை அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த சமயம், தக்காணத்தின் தலைவிதியை நிர்ணயித்த யுத்தம் ஒன்று நடந்து முடிந்திருந்த காலம்.  விஜய நகரப் பேரரசுக்கும் பாமினி சுல்தான்களுக்கும் இடையில் இறுதிப் போராட்டமாக கி.பி.1565ஆம் ஆண்டில் தலைக்கோட்டை என்னுமிடத்தில் கடும் சமர்  நடைபெற்றது. இப்போரில் விஜய நகரப் பேரரசுசின்னா பின்னமாகப் போய் விட்டது.  அதற்குப் பிறகு இப்பேரரசு தலை தூக்கவே முடியவில்லை.  இம்மன்னர்களது பிரதிநிதியாக பல பிரதேசங்களிலும் பணிபுரிந்தவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டு தன்னாட்சி புரிய ஆரம்பித்து விட்டனர்.  மதுரை, தஞ்சை, செஞ்சி போன்ற இடங்களில் நாயக்கப் படைத் தளபதிகள் இம்மண்ணைக் கைப்பற்றிக் கொண்டது இப்படித்தான்.  இந்த கால கட்டத்தில் தான் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் தமிழ் நாட்டு விஜயம் அமைந்தது.


    தமிழ்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாற்றில் ஷாஹுல் ஹமீது ஆண்டகை அவர்களது வருகை ஒரு திருப்புமுனை என்று கூறலாம்.  அன்னாரது வருகைக்கு முன்னதாக சுமார் ஒன்பது நூற்றாண்டுகளாக இத்தமிழ் மண்ணில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள்; இஸ்லாத்தின் போதனைகளின் பிரகாரம் ஒழுகி வந்தார்கள். தமிழ் முஸ்லிம்களின் வளர்ச்சி சிறுகச் சிறுகத்தான் இருந்தது.  இங்கு வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களைப் பார்த்து,அவர்கள் மூலமாக இஸ்லாத்தைத் தெரிந்து அம்மார்க்கத்தைப் பின்பற்ற முன்வந்த மக்கள் அற்ப சொற்பமாகவே இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முஸ்லிம் மக்களின் பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. பல ஊர்களிலும் அவர்கள் சென்று குடியேறிதங்களது வாழ்க்கைக்கான வழி முறைகளைக் கண்டறிந் திருக்கிறார்கள்.  நாகூர் ஆண்டகை அவர்கள் விஜயம் செய்த ஊர்களில் எல்லாம் அச்சமயமே முஸ்லிம் மக்கள் வாழ்ந்திருக்கவும் செய்தனர்; அம்மகான் செல்லாத முஸ்லிம் ஊர்கள் பலவும்  இருந்திருக்கவும் செய்யலாம்; அவ்விபரங்களை அறிய முடியவில்லை. அந்த ஒலியுல்லாஹ் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து, வாழ்ந்து, அவர்கள் இறைவனடி சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக, தமிழக முஸ்லிம்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் பல சான்றுகள் உள்ளன. குறைந்தது இரு மடங்காகவாவது முஸ்லிம் மக்கள் தொகை இக்கால கட்டத்தில் அதிகரித்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.  அம்மகான் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி இருக்கின்றது.  அன்னாரது சிறப்புக்களையும் மேன்மையையும் நேரில் கண்டறிந்த பொதுமக்கள் ஆண்டகை அவர்களது வசீகரத்தினால் கவரப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த கூட்டத்தினர் தங்களது ஈமானை உறுதி செய்து கொள்ள இந்த திக் விஜயம் உதவியது. இஸ்லாத்தைத் தெரிந்துகொள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இந்த விஜயம் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.  அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் ஆண்டகை அவர்களுக்கு இருந்த அற்புத சக்தியை நேரில் கண்ட மக்கள், கூட்டங் கூட்டமாக அவர்களைப் பின்பற்றி இருக்கிறார்கள்.  போகும் இடமெல்லாம் அவர்கள் கவுரவிக்கப் பட்டிருக்கிறார்கள்;பாராட்டப்பட்டிருக்கிறார்கள்; பின்பற்றப் பட்டிருக்கிறார்கள். 


    தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கனுடைய பிணியை அந்த மகான் குணப்படுத்தியது, ஒரு பெரும்  மாற்றத்தையே ஆட்சியாளர்களிடம் ஏற்படுத்தியது. பில்லி சூனியம் போன்ற மந்திரங்களினால் அம்மன்னன் மிகவும் அவதியுற்றிருந்தான்.  நீண்ட நெடுநாட்களாக பிரபல மாந்திரீகர்களையெல்லாம் வைத்து பரிகாரம் செய்து பார்த்திருக்கிறான். ஒன்றும் பலிக்க வில்லை; கைகூடவில்லை. நாகூர் ஆண்டகை அவர்களது துஆவினாலேயே தஞ்சை மன்னனது பிரச்சனைகள் தீர்ந்து போயின.  அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஓர் அளவேயில்லை.  இம்மகான் அவர்களுக்கு ராஜமரியாதைகள் செய்திருக்கிறான். இதைக் கண்ணுற்ற மக்களும் இம்மகானின் மகிமையை உணர்ந்து கொள்ள முன் வந்ததில் புதுமை ஒன்றுமில்லைதான்!


    தஞ்சையின் மேற்குப் பகுதியில் ஒலியுல்லாஹ் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து வரும்பொழுது பல பிராமணக் குடும்பங்களே அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி இருக்கின்றன. கற்றறிந்தவர்களையும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களையும் இம்மகானின் தீன்பணி இஸ்லாத்தின் பக்கமாக இழுத்துவிட்டது. வழக்கமாக, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் கீழ்ஜாதிகளைச் சேர்ந்தவர்களுமே தங்களது விமோச்சனத்தை நாடி இஸ்லாத்தின் பக்கம் வருவதுண்டு! தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தில் தங்களுக்கு எதிர்காலம் இல்லையென முடிவுகட்டும் மக்கள் கூட்டங்களுக்கு, ஒரே விடுதலை மார்க்கமாக இஸ்லாம் இருந்து வந்தது. எனவே, அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது விமோச்சனத்திற்கான வழியைக் கண்டுபிடித்து அத்துடன் ஐக்கியமாகிக்  கொண்டது புதியதல்ல, புதுமையல்ல. ஜாதிப்படித்தரங்களில் உச்சாணி இடங்களில் இருந்தவர்களும் கூட,ஏகதெய்வக் கொள்கையை இம்மகான் மூலம் அறிய நேர்ந்ததும் அவர்களும் இவ்வழியையே தேர்ந்தெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்க தகவலாகும்.


    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாகூர் ஆண்டகை அவர்கள் சில காலம் தங்கி இருந்திருக்கிறார்கள்.  பொதிகை மலைச் சாரலில்தான் அது இருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறது.  அச்சமயம் அம்மலையையொட்டி வாழ்ந்த ஞானிகளுடனும் சித்தர்களுடனும் நாகூர் ஆண்டகை அவர்கள் உரையாடல்களை நடத்தி இருக்கிறார்கள். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. தென்காசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் கி.பி.1463ம் ஆண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.  அந்நகரிலிருந்து அதிவீர ராமபாண்டியன் என்ற மன்னன் பின்னர் ஆட்சி செய்திருக்கிறான். அவன் கி.பி.1564ம் ஆண்டில் மரணமடைந்துள்ளான்.  இம்மன்னன் காலத்தில் அல்லது அவன் மகனுடைய ஆளுகையின் போது நாகூர் ஆண்டகை தென்காசிக்கு வருகை தந்துள்ளார்கள். ஆரம்பத்தில் தென்காசி கோயில் நிர்வாகிகள் இவர்கள் வருகை குறித்து அலட்சியமாக இருந்திருக் கிறார்கள்.  பின்னரே, விஷ­யம் தெரிந்து கொண்டதும், ஒலியுல்லாஹ் அவர்களை அந்த நிர்வாகிகளும் மரியாதை செய்ததாக, கர்ணபரம்பரைச் செய்தி ஒன்று இவ்வட்டாரத்தில் இன்றளவும் நிலவி வருகிறது.


    தமிழ்நாட்டிள்ள தென்மாவட்டங்கள் பலவற்றிற்கும் அம்மகான் சென்றிருக்கிறார்கள். தஞ்சை,திருச்சி,மதுரை,திருநெல்வேலி (மேலப்பாளையம்) போன்ற பெரிய நகரங்களுக்கும் போயிருக்கிறார்கள்.  அவர்கள் தனித்துச் செல்லவில்லை.  ஒரு பெரிய கூட்டமே அவர்களைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது.நூற்றுக்கணக்கானவர்கள் உடன் சென்றிருக்கிறார்கள். அரசன் பவனிவருவது போல, அவர்கள் திக் விஜயம் அமைந்துள்ளது.  மக்கள் வெள்ளம் கூட்டங் கூட்டமாக அவர்களை வந்துதரிசித்திருக்கிறது; மரியாதை செலுத்தி இருக்கிறது.  அமைதிப்படை ஒன்று தமிழ்நாட்டில் வலம் வருவது போன்றகாட்சி தான் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் இறுதியில் நடைபெற்றிருக்கிறது.  இக்கண்கொள்ளாக் காட்சியை நேரில் கண்ணுற்ற பொது மக்கள் அம்மகானின் சிறப்புக்களில் மனதைப் பறிகொடுத்து இன்பம் கண்டனர்.


    அன்றைய அரசியல், சமுதாய சூழ்நிலைகளும் அம்மகானின் பிரச்சாரங்களுக்கு அனுசரணையாகவே அமைந்திருந்தன, நாயக்க மன்னர்கள் தீவிரமாக ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்த போதிலும்,மதவிவகாரங்களில் தாராளப் போக்கையே அனுசரித்து வந்துள்ளனர். இம்மகான் விஷ­யத்தில்தான் ஆட்சியாளர்கள் பெருமனதுடன் நடந்து கொண்டார்கள் என்பதல்ல.  கிருஸ்தவர்கள் தங்களது மார்க்கப் பிரச்சாரத்தை தமிழ்நாடு எங்கணும் தீவிரமாக முடுக்கி விட இம்மன்னர்கள் அனுமதி  வழங்கியிருந்தனர்.  போச்சுகீசிய, டச்சு பாதிரிமார்கள் கடற்கரை பட்டணங்களில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் பரவலாகப் பிரச்சாரம் செய்து வரலாயினர். அக்காலத்தில் வாழ்ந்த பொதுமக்களும் இப்பிரச்சாரங்களை எதிர்க்கவில்லை. அவரவர் இஷ்டம்போல, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான மார்க்கத்தைத் தழுவி அதன்படி ஒழுகலாம் என்று கருதினர்;  அதன்படி நடந்து வந்தனர்.  எனவே, சமுதாயங்களிடையேயோ ஆட்சியாளர்களிடமோ எந்தவித எதிர்ப்பும் கொந்தளிப்பும் இல்லாதிருந்தது. அவரவர் இஷ்டப்படி மதவி­ஷயங்களில்    நடந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டில் அனைவருக்கும் கிட்டி இருந்தது. இக்கால கட்டத்தில் தான், நாகூர் ஆண்டகையின் விஜயம் அமைந்தது.  தமிழ்நாட்டைச் சுற்றி அவர்கள் வலம்  வந்ததுடன் நாகூர் நகரிலும் சுமார் கால் நூற்றாண்டு வாழ்ந்து சமயப்பணி ஆற்றினார்கள்.  ஹிஜிரி 978ம் ஆண்டில் அவர்கள் மரணமடைந்தார்கள். எனவே,இஸ்லாமிய மார்க்கம் குறித்து தமிழ் நாட்டில் ஒருவிழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பெருமையும் இச்சமுதாயம் பலமடங்கு பெருக்க வழிவகுத்துக் கொடுத்த சிறப்பும் இந்த ஒலியுல்லாஹ் அவர்களுக்கே உரியது. தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றில் அவர்கள் மகோன்னதமானதொரு இடத்தை வகிக்கிறார்கள் ச்என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.


(  நன்றி: தமிழகத்தில் இஸ்லாமிய வரலாறு)