ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  உமர் (ரலி) புராணம்


உமர் (ரலி) புராணம்


ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன்மெளலானா

          அல்ஹா´மிய் நாயகம் அவர்கள்

முதலாவது உதய காண்டம்

 

                        யாங்கு(ம்) நிறைந்துளான் யானென் றிலாதவனே

                        ஞாங்கரு மில்லாதான் ஞான்றொடு- ஆங்கீங்

                         கெனுநிலை யில்லா னிறையவற்கு நானே

                        பணிந்தனெ னீங்கப் பரி.


கொண்டுகூட்டு :


        யாங்கும் நிறைந்துள்ளான், யானென்றில்லாதவன்.  ஞாங்கரு மில்லாதான்.  ஞான்றொடு ஆங்கு, ஈங்கு எனும் நிலை இல்லான்.  இறையவற்கு நான் (ஏ) பணிந்தனென் பரி நீங்க.


பொருள் :


        நான் என்று இல்லாதவன்.  எங்கும் நிறைந்துள்ளான். முன், பின், பக்கம் (மேல், கீழ்) எனும் இடங்களில்லாதான். காலத்தோடு ஆங்கு, ஈங்கு எனும் இட நிலைகள் இல்லான்.  அத்தன்மைத்த இறையோனுக்கு  நான் (என்) துன்பம் நீங்கப் பணிந்தேன்.


குறிப்பு :


        தன்னை நான் எனக் கூறுந் தன்மையற்றவன். உருவமைப் பில்லான்.  அவன் சிருஷ்டிப் பொருளல்லன். அவன் எவராலும் சிருஷ்டிக்கப்படவில்லை.  ஆகலின் யான் எனக் கூற வியலாதான் அவனுக் கோரெல்லையில்லை. காணும் பொருள்களான தூலப் பொருள்களிலும் காணாப் பொருள்களான சூக்குமப் பொருள்களிலும் ஒவ்வொன்றாயன்றி முழுமையாய்ப் பூரணமாய்ப் பிரிக்க வியலாது கலந்து நிறைந்தவன். அவனல்லாச் சராசரங்கள், அருவங்களெவையுமில. பனிக்கட்டி நீரிற் கரைந்தன்ன, கடலோடுஅலை கலந்தன்ன உள்ளவன் என்க. காலத்தோடு பிரிவறக்கலந்த காலமவன்.  அவனுக்குக் காலமில்லை இடத்திற்கு இடமாயுள்ளவன்.  அவனுக்கு இடமில்லை.

                                                                                                                                                   ச்ஏ : இசைநிறை.