ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  வாழ்க்கை வரலாறு


முஹம்மது  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களின்

வாழ்க்கை வரலாறு

                          மூலம் : திருநபி சரித்திரம். தொகுப்பு: முஹம்மதடிமை, திருச்சி .


முனாஃபிகீன்கள் : நயவஞ்சகர்கள்


    வர்கள் தோற்றத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, அந்தரங்கத்தில் முஸ்லிம்களுக்கு விரோதிகளாய் இருந்தனர். இக்கூட்டத்தின் தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபை இப்னுஸலூல் என்பவர், மிக்க செல்வமும் செல்வாக்கும் உடையவராகவும் இருந்தார்.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்பு அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது.  ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகு நிலைமை மாறி விட்டது.    அன்சாரிளுடைய தன்னலமற்ற ஊக்கமும் உழைப்பும் மதீனாவின் நிலையை மாற்றி விட்டன. 


    பெருவாரியான மக்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததால் முஸ்லிம்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது.  அதன் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செல்வாக்கும் அதிகமாயிற்று.  இது அப்துல்லாஹ் இப்னு உபை என்பவருக்குப் பிடிக்கவில்லை.அவர்களின் செல்வாக்கைக் குறைப்ப தற்குப் பகிரங்கமாக ஒன்றும் செய்ய முடியாதென்றறிந்து அவர்களுடன் வெளியே நேசமுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் முஸ்லிம்களுக்கு இயன்ற அளவு இன்னல் இழைத்து வந்தார். மதீனாவில் நடைபெறும் சம்பவங்களை அப்துல்லாஹ் இப்னு உபை, மறைமுகமாக மக்கா குறைகளுக்குத் தெரிவித்து வந்தார்.


    முனாஃபிகீன்கள் முஸ்லிம்களுக்கு மறைவாகக் கெடுதி செய்து வருவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு நன்கு தெரியும்.  ஆயினும் அவர்கள் முனாஃபிகீன்களுடனும் நேச பாவத்துடன் நடந்து அவர்களுக்கு நன்மையே செய்து வந்தார்கள்.


    அவர்களை எப்படியும் நல்வழிக்குக்கொண்டு வரவேண்டும் என்பதே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கம்.  முனாஃபிகீன்களின் தீச்செயல்களைக் சகிக்க மாட்டாமல் ஒரு ஸஹாபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் சமூகத்தில் வந்து, யாரசூலல்லாஹ்! தாங்கள் அனுமதி கொடுத்தால் முஸ்லிம்களுக்குக் கெடுதி செய்யும் முனாபிகீன்களின் தலைவரைக் கொன்று விடுகிறேன் என்று சொன்னார்.அப்போது கருணையே வடிவான பெருமானார்  அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்ததுடன்;


     “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்று யார் வாயினால் சொல்லி விட்டாரோ அவரை முஸ்லிமாகத் தான் கருத வேண்டும். அவரின் அந்தரங்கம் அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கிறது” என்று அருள்மிகு அண்ணலார்  அருளினார்கள்.


மேற்சொன்ன முப்பெரும் பகைவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்குத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய திட்டமும் நிறைவேறாமல் செய்ய வெவ்வேறு தடுப்பு முறைகளைக் கையாள வேண்டிய திருந்தது.  மதீனாவில் குழப்பம் உண்டாகாமல் சமாதானத்தை நிலை நிறுத்தவும்,ஒவ்வொரு வகுப்பாரும் அவர்களின் மதக்கிரியைகளைத் தங்கு தடையின்றிக் கடைப்பிடித்துக் கொள்ளவும் அன்னியவர் எவரும் மதீனாவைக் கைவசப்படுத்தாமல் பாதுகாக்கவும் வேண்டிப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த தூரநோக்குடனும் மதிநுட்பத்துடனும் மதீனாவிலுள்ள எல்லா ஜாதியினரையும் ஓர் உடன்படிக்கையின் மூலமாகக் கட்டுப்பாடு செய்தனர். 


    அவ்வுடன்படிக்கையின் முக்கிய நிபந்தனைகளாவன: யூதர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதில் அவர்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு; அவர்களுடைய மத சம்மந்தமான காரியங்களில் யாதொரு தடையும் ஏற்படாது.  யூதர்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சிநேகிதர்களாக இருந்து வர வேண்டும். யூதர்களுடனாவது, முஸ்லிம்களுடனாவது அந்நியர்கள் சண்டை செய்ய வந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். மதீனாவை அந்நியர் தாக்குவதாக இருந்தால் இரு கட்சியினரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பைத் தடுக்க வேண்டும்.  யாருடனாவது சண்டை அல்லது சமாதானம் செய்வதானால் இருவரும் சேர்ந்தே செய்ய வேண்டும்.


    முஸ்லிம்களுடன் சேர்ந்து ஒற்றுமையாய் இருக்க விரும்புகிற யூதர்களின், பாத்தியதைகளைக் காப்பாற்றவும் அந்நியர்கள் அவர்களைத் தாக்காதபடி பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். யூதர்களின் ஆதரவிலிருக்கிற மற்றவர்களின் பாத்தியதைகளும் பாதுகாக்கப்படும். குற்றம் செய்தவன் யூதனாயிருந்தாலும்,முஸ்லிமாயிருந்தாலும் நியாயமான தண்டனைக்கு உட்படுத்தப்படுவான். குற்றவாளி பணக்காரனாயிருந்தாலும் ஏழையாயிருந்தாலும் ஒரே விதமான தண்டனையே கொடுக்கப்படும்.


    இந்த உடன்படிக்கையின் மூலமாக விரோதங்களெல்லாம் நீங்கி விட்டதாகக் கருதப்படும்.  மதீனாவிற்குள் பிரவேசிக் கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த உடன்படிக்கையில் கண்ட உரிமையுண்டு. இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொள்ளுகிறவர்களுக்குள் ஏற்படும் தாவாக்களை அல்லாஹ்வுக்குப் பின் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடிவு செய்வார்கள். இந்த  உடன்படிக்கையை முஸ்லிம்களின் விரோதிகள் உட்பட மதீனாவிலுள்ள எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.  இதற்கு முன் ஒருவனுக்கு மற்றொருவனால் கஷ்ட, நஷ்டம் ஏற்பட்டால் அவன் தன்னுடைய பலத்தைக் கொண்டாவது அல்லது தன் உறவினர்களின் ஆதரவைக் கொண்டாவது அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதிருந்தது.இவ்வுடன் படிக்கையால் இந்தக் கெட்ட வழக்கம் அடியோடு ஒழிந்து விட்டது.  இதன் மூலமாகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நபி என்ற முறையிலும் உடன்படிக்கை மூலமாகவும் மேலான தலைமை ஸ்தானத்தை அடைந்தார்கள்.


இதுவரை முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு நேரத்திலும் தொழுகையில் இரண்டு ரக்கஅத்துகள் தாம் பர்லாயிருந்தன. இவ்வருட முதலாக லுஹர், அஸர், இஷா ஆகிய இம்மூன்றுதொழுகைகளும் நான்கு ரக்க அத்துகளாக பர்லாக்கப்பட்டன.