ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Dec 2012 » ​  என்னை நேசிப்பாயா?என்னை நேசிப்பாயா?

                                                                     அபூ பாஹிரா


    ருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னை நேசிக்காதவரை நீங்கள் (முஃமின்) உண்மை விசுவாசியாக முடியாதெ”ன்றுகூறி தங்களை நேசிக்கத் தூண்டுகிறார்கள்.


    மேலும், அஹ்லபைத்துகள் - இமாம்ஹஸன், ஹுஸைன் (ரலி) இவர்களையெல்லாம் குறிப்பிட்டு, அவர்களை நேசிக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார்கள்.


    இப்படி வற்புறுத்தி வற்புறுத்தி நேசிக்கக் சொல்வதன் ரகசியம் என்ன தெரியுமா? காரணம் இல்லாமல் பெருமானார் வலியுறுத்த மாட்டார்கள் அல்லவா?இதனை விளங்க வேண்டுமென்றால் நம் வாழ்க்கையிலேயே நாம் ஓர் உதாரணத்தைக் கூறி விளங்க வைக்கலாம்.


 குழந்தையை மூன்று நான்கு வயதானதும் கல்வி நிலையமான பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம். அது அழுது கொண்டே ஆர்வமின்றி செல்கின்றது.  தினசரி பள்ளிக்குச் செல்லாத  பிள்ளையை ஆசை காட்டி, அறிவுரை கூறி, தேவைப்பட்டால் அதட்டி மிரட்டி பள்ளியில் கொண்டு போய் விடுகிறோம்!  அதுவோ பால் மனம் மாறாத பச்சிளம் பிஞ்சு! அதனை ஏன் நாம் இத்தனை கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்புகிறோம்?


    நமக்குத் தெரியும் அந்த ரகசியம்! பிள்ளை படித்து பண்பட்டால் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். பிற்காலத்தில் கை நிறைய  சம்பாதித்து குடும்பத்தைக் காப்பான்.  இந்த ரகசியம் நமக்குத் தெரியும்!  ஆனால் பிள்ளைக்குத் தெரியுமா? தெரியாது!


    இதே  போலத் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், தங்கள் மீது அன்பு வைத்தவருக்கு எதிர்காலத்தில் என்னென்ன கிடைக்கும் ? எப்படியெல்லாம் அந்த அன்பு அவரை இம்மை மறுமையில் உயர்வுக்குக்கொண்டு போகும்?  அந்த அன்பு அவர் நரகத்திற்குச் செல்லாமல் கேடயமாகி, சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாகும்! என்பது பெருமானாருக்குப் புரியும்.படிக்காதவன் வாழ்க்கை  எப்படி பாதாளத்திற்குச் செல்லும் என அஞ்சுகிறோமோ அதே போல் தங்கள் மீது அன்பு கொள்ளாதவர் என்னென்ன துன்பத்துக்கு ஆளாவார்? என்பதும் அவர்களுக்கு விளங்கும்! அதனால் தான் LOVE ME, LOVE ME என்னை நேசி !என்னை நேசி! என அன்புவலை விரிக்கிறார்கள். மேலும் ஓர் உதாரணத்தை நாம் கூறலாம். 


    வாசம் மூக்கைத் துளைக்கும் சத்தான உணவு !  ஆனால் குழந்தையோ சாப்பிட மறுக்கிறது! அப்போது தாய் என்ன செய்வாள்? வற்புறுத்தி வலியுறுத்தி, ஆசை காட்டி, மிரட்டி அந்தக் குழந்தைக்கு ஊட்ட எத்தனிப்பாள் ! ஏனென்றால் சரியாகச் சாப்பிட்டால் குழந்தை  எவ்விதம் ஊட்டமாக வளரும்?  சாப்பிடா விட்டால் நோஞ்சானாக மாறி நோயில் விழும் என்பதை அவள் அறிவாள் ! இதே போலத்தான் பெருமானாரும் ஒரு தாயைப் போல மாறி தங்கள் மீது அன்பு கொள்ள வேண்டும் என்னும்  மந்திர உணவை மனிதக் குழந்தைகளுக்கு ஊட்ட முற்படுகிறார்கள்.


இன்னோர் உதாரணமும் சொல்லலாம்!


    வீட்டில் குழந்தை குட்டிகளுடன் நாம் இருக்கிறோம். அப்போது ஊரிலிருந்து நம் உறவினர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்கள். வந்தவர்களை வரவேற்று உபசரித்த பின், குழந்தைக்கு உறவினர்களை அறிமுகம் செய்து வைக்கிறோம். அதில் ஒருவரை நம் குழந்தையிடம், இவர் தான் உங்கள் மாமா! நீ பிறப்பதற்கு முன்னே சவூதி சென்று விட்டு,நீ வளர்ந்த பின் இன்று வருகிறார். உனக்கு டிரஸ், பொம்மைகளெல்லாம் வாங்கி அனுப்பியவர் இவர் தான்! என அறிமுகம் செய்து வைத்து அவர் மீது ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறோம்.


இதே போலத்தான், நாம் உலகில் பிறப்பதற்கு முன்னரே நமக்காக அல்லாஹ்விடம் எல்லா சலுகைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கும் பெருமானார்,தங்களை நேசிக்கச் சொல்கிறார்கள்.


    அவர்கள் தங்களை மட்டும் நேசிக்கக் கூறவில்லை. தங்கள் கொடியில் பூத்து தங்கள் மடியில் தவழ்ந்த அஹ்லபைத்துகளான அருட்செல்வங்களையும்  நேசிக்கச் சொல்கிறார்கள். ஏனென்றால் பெருமானாரை நேசித்த நேசம் அன்றோடு, அவர்களோடு முடிந்து போவதா? அது அற்ப ஆயுள் கொண்டதா? இல்லையே ! அது நித்திய அன்பு அல்லவா?


    அந்த  நித்திய அன்பு உலகில் வாழ்ந்திருக்க வேண்டுமானால் அன்பு கொள்ளப்படும் பொருளும்  உலகில் இருக்க வேண்டுமல்லவா? அது இருக்கிறது! இதோ பெருமானாரின் பிரதிகளான அஹ்லபைத்துகளாக, ஹஸன்-ஹுஸைனாக, பாத்திமா - அலியாராக ! அவர்களின் மரபில் பூத்த குத்புமார்களாக, வலிமார்களாக...!


    அந்த அன்பு உலகில் என்றும் வாழும் அன்பு ! அன்று அது பெருமானாருக்கும்  சஹாபாக்களுக்குமாக இருந்தது ! இன்று அது அஹ்லபைத்துகளாகவும் அவர்களை நேசிக்கும்  நமக்கும் இடையே இருக்கிறது. எனவே அந்த அன்புக்கு உயிர்கொடுத்து நாமும் உயிர் மனிதர்களாக உலா வருவோமாக!