ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Aug 2012   »     அஸ்ஸையித் கலில் அவ்ன் மெளலானா

குதுபுல் அக்தாப், சாஹிபுல் வக்த், ­ஷம்ஸுல் வுஸூத், அஷ்ஷெ­ய்கு ஜமாலிய்யா

 

 அஸ்ஸையித் கலில் அவ்ன் மெளலானா

                                  அல்ஹஸனிய்புல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


    த்திய ஹக்கின் சம்பூரண தோன்றுதுறையும் இருலோக இரட்சகர் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அந்தரங்க வெளிப்பாடும் முஹிய்யுத்தீனிய சந்நிதானத்தின் பிரதிநிதியுமாகிய  ஆருயிர் செய்கு நாயகம் குதுபுல் அக்தாப், சாஹிபுல் வக்த், ­ஷம்ஸுல் வுஜூத் அஷ்ஷெ­ய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்1937 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (ஹிஜ்ரி 1356 ஆம் வருடம் ­ஷவ்வால் மாதம் பிறை 16) திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு. குதுபுல் அக்தாப், குதுபுல் பரீத், சாஹிபுல் வக்த், ­ஷம்ஸுல் வுஜூது அஷ்ஷெ­ய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களுக்கும் மாதர் திலகம் அஸ்செய்யிதா ஸஹர்வான் கண்ணே (ரலி) அவர்களுக்கும், ஈழமணித்தீவதன் தென்கரை தன்னிலே விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வெலிப்பிட்டி எனும் சிற்றூரில் திருமகவாக, சுயம்பாக இவ்வவனியில் பிரசன்னமானார்கள்.


      இவர்கள் இளம்வயது முதலே ஹக்கின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்களாய்த் திகழ்ந்தார்கள். அகமியத்தின் அற்புத நிகழ்வுகள் அவ்வப்போது அவர்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருந்தது. இளம் வயதிலே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதிமுடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓத தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் அருமைத் தந்தை நாயகம் அவர்களிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள். அவர்களின் தந்தை நாயகம் அவர்களுக்கு நிகராக இல்முகளைக் கற்ற பட்டங்கள் பல பெற்ற, ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டங்களுக்கு நிகராக பட்டயங்கள் பெற்ற ஆசிரியர்களைக் காணல் அரிது.  தந்தை யாஸீன் நாயகம் அவர்கள் கற்றதை கசடறக் கற்றதோடு நில்லாமல் அதற்கு ஏற்றவாறு தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமேதையாகும். அவர்களின் கல்வித் திறமையை, ஆன்மீகப் பேரொளியைப் பற்றி அறியாதவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் அக்காலத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நடமாடும்  பல்கலைக்கழகத்திலே உள்ரங்க வெளிரங்க இல்முகளைக்கற்றதால் அவர்கள் வேறு ஒரு மதுரஸாவில் போய்ச் சேர்ந்து பயில வேண்டிய அவசியமே இல்லாது போனது. அப்படி ஒரு மதுரஸாவிற்குப் போயிருந்தால் இவர்களின் தந்தை நாயகமவர்களிடம் கற்ற கல்விகளை எல்லாம் அங்கு கற்றிருக்கவே முடியாது என்று அவர்கள் திருவாயால்சொல்லக் கேட்டிருக்கிறோம்.

 

     அருமை செய்கு நாயகம் அவர்கள் தமது தந்தை நாயகம் அவர்களிடம் பாடம் படித்த செய்திகளை அவ்வப்போது எங்களுக்கு சொல்லிக் காட்டுவார்கள். தந்தை நாயகம் அவர்கள் பாடம் போதிக்கின்ற முறையையும், அவர்களிடம் எங்கள் செய்கு நாயகம் அதபுடன் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்ட முறைகளையும் கேட்டு நாங்கள் பெருவியப்படைவோம்.

    

  அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் அவர்கள் தம் அருமை மகனாருக்குப் போதிக்கத் தவறவில்லை. இப்படி எல்லா நிலைகளிலுமே தம் தந்தையிடம் கல்விகற்ற  செய்கு நாயகம் அவர்களையும் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் என்றால் அது மிகையாகாது. ஆகவே அவர்களுக்குப் பட்டயம் எதுவும் தேவைப்படவில்லை. மெளலவி பாஸில் வரை எல்லாப் பாடங்களையும் தங்கள் அருமை தந்தை நாயகம் அவர்களிடமே கற்றுத் தேர்ந்தார்கள். தம் தந்தை  நாயகம் அவர்களிடம் கற்றபாடங்கள் :தப்ஸீர்,ஹதீஸ், உஸுல் ஹதீஸ்,  பிக்ஹு, உஸுல்பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக்,ஸர்பு, நஹ்வு, மன்திக் இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் முதலானவை ஆகும்.


      செய்கு நாயகம் அவர்களின் வாரிதாத் என்ற தெய்வீக வெளிப்பாடுகளிலிருந்து அன்னவர்களின் அகமியத்தின் ஆழத்தை ஓர் அளவுக்கு நாம் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் சிற்றறிவு, பேரறிவு எல்லைகளைக் கடந்து ஹக்கின் திவ்விய திருதரிசன மகிமையில் மூழ்கி  இருப்பதால் அவர்களின் அகமியத்தின் பூர்வீகத்தையும் பூரணமாகப் புரிந்து கொள்ள எவராலும் முடியாது. அது ஆழ்கடலின் ஆழத்தை அறிவதைவிட பன்மடங்கு பாரதூரமானது.


      ஈழத்திருநாட்டின்  தென்பகுதியில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் வெலிகமா என்னும் நல்லூரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயாவில் S.S.C. வரை ஆங்கிலத்தைப்  பயிற்று மொழியாகக் கற்றுத் தேர்ந்தார்கள். பின்னர் தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் மீண்டும் S.S.C. தேர்வை தமிழிலும் எழுதி தேறினார்கள். அவர்களின் சொந்த முயற்சியால் பண்டிதப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்கள். பள்ளியில் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தும் தமிழ் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வ மிகுதியால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது சங்ககால ஏனைய நூல்களையும் தாங்களாகவே கற்றுக் கொள்வதில் பேராசை கொண்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்கள். இதனால் நன்னூல், தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகைதண்டியலங்காரம் முதலான பன்னூல்களையும் மிக எளிதில் கற்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.


      1953 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அவர்கள் தமிழில் கவிதைகள் எழுதத்தொடங்கி விட்டார்கள். இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் இலங்கை தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார்கள்.


      ஆசிரியர் பயிற்சி 1962 இல் முடிய 1963ஆம் ஆண்டில் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்கள். இங்கு 10ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்துள்ளார்கள். அதன்பின் 1972 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று குருணாகல் என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு ஒருவருடம் சேவை செய்தார்கள். பின்னர் அங்கிருந்து வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்கள்.


      1973 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலம் சிலாபம், புத்தளம்,வட்டாரங்களில் (CEO) ஆகப் பணிபுரிந்தார்கள். பின்னர் 1978 ஆம்ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள். அங்கு பணியில் இருந்த சமயம்அவர்களுக்கு E.O.Educational Officer ஆக பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அங்கு கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தும் அவர்களுக்கு மாற்றம் கிடைக்காத காரணத்தால் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.


      அன்று முதல் ஆதியிறை, அவர்களை ஆன்மீகப் பணிக்கு முற்றிலுமாகத் திருப்பிவிட்டது போலும். அரபியில் ஆரம்பத்தில் ஒரு சில கவிதைகளையே எழுதியுள்ளார்கள். அன்னவர்களின் அருமைத் தந்தையும் ஷெ­ய்கும் ஆன யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரே அரபியில் ஏராளமான  கவிதைகளை எழுதியுள்ளார்கள்.  அருமை செய்கு நாயகம் இந்தியாவுக்கு 1966 ஆம்ஆண்டு அவர்களின் தந்தை நாயகம் மறைந்த 40ஆவது நாளன்று முதல் விஜயம் செய்தார்கள்.


      அதன்பின்னர் 1968 ஆம் ஆண்டு முதல், வருடா வருடம் இந்திய விஜயத்தை மேற்கொண்டு சுமார் 3 மாதங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து  பக்தர்களை ஆசீர்வதித்து அருள்புரிந்து ஆன்மீக அறிவு புகட்டி வருகிறார்கள். இதேபோல் 1998 ஆம் ஆண்டு முதல், துபை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள  பக்தர்களுக்கு ஆசீர்வாதம் நல்கி அருள்பாலித்து ஆன்மீக அறிவு போதித்து வருகிறார்கள். இன்னும் 2002 ஆம் ஆண்டு முதல் மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு திருவிஜயம் செய்து அங்குள்ள பக்தகோடிகளுக்கு ஆசீர்வாதமும், அருளும், ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்கள். இவர்களின் சிறப்புக்குரிய பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா நாயகம் (ரலி) அவர்களைப் போல் பல நாடுகளிலும் ஏராளமான முரீதுகள் இவர்களுக்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              (நன்றி : 70 ஆம் பிறந்ததினவிழா சிறப்புமலர்)