ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » தன்னை அறிவது எப்படி ?

பட்டோலை

தன்னை அறிவது எப்படி ?

(26.9.69 அன்று சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திருச்சி மர்ஹூம் Dr. S.பதுருத்தீன் M.B.B.S அவர்களுக்கு அனுப்பிய மேலான கடிதம்  )

 

பரிசுத்த ஹக்கின் திருவருளுக்கும் நமது அன்பிற்கும் துஆவிற்குமுரிய மஹ்பூப் பிள்ளை Dr.S. பத்ருத்தீன் சாஹிப் M.B.B.S அவர்களுக்கு J.S.K.A.மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யின் அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் 17.9.69 கடிதம் கண்டோம்.  அல்ஹம்துலில்லாஹ்.  பல அசந்தர்ப்பங்களால் உடனடியே பதில் எழுத முடியவில்லை.

“தன்னை அறிதல்” என்பது  பலவகைகளிலும் அறிதல் என்பதாகும்.  இலெளகீக முறையில்தன்னை அறிதல் என்பது ஒன்றாகவும், மற்றொன்று ஆத்மீக முறையில் தன்னையறிதல் என்பது ஒன்றாகவும் இதைஇரண்டாக வகுத்துக் கொள்ளலாம்.

தூலமான முறையில் தன்னையறிதல் என்றும் சூக்குமமான முறையில் தன்னை அறிதல்எனவும் அதைக் கொள்ளலாம்.  வெளிரங்கமான முறையில் தன்னையறிதல் என்றும் உள்ரங்கமான முறையில் தன்னையறிதல் என்றும் கொள்ளலாம்.

இலெளகீக,தூல, அல்லது வெளிரங்க முறையில் ஹக்கைக்காணுதல் அல்லது அறிதல் என்பதைக்கவனிப்போம்.

தன்னைப்பற்றி, அதாவது தன்வாழ்வைப் பற்றி அன்றாட அநுபவங்கள் பற்றித் தான் சிந்திக்கும்போது தன்னையறியாத ஒரு சக்தி தன்னிலிருந்து நடாத்தி வருவதை எமக்கு நுணுக்கமான முறையில் அறிந்து கொள்ளமுடிகின்றது.  இந்தச் சக்தி எங்கிருந்துவருகிறது எனப்பார்க்கும் போது அது வேறெங்குமிருந்தல்ல; தன்னகத்துள்ளிருந்தேதான் இது வெளியாகிறது என்பது அறியக் கிடைக்கிறது.

தாம் நினைக்கும் காரியங்கள், தாம் நினையா முறையில் மாற்றமடைகின்றது.  மாற்றம் அடையும் காரியம் தமக்கு வெற்றிகரமானதாகவும்இருக்கிறது.  தோல்விகரமான தாகவுமிருக்கிறது. வெற்றியைக் கண்டு சந்தோ­மும் தோல்வியைக் கண்டு துக்கமும்அடைகிறான்.  இவை இரண்டும் இருதுருவங்கள் போல்காட்சியளிக்கின்றன. துக்கத்தை அனுபவிக்கிறவனும்தானாகவே இருக்கிறான். சந்தோ­த்தை அனுபவிக்கிறவனும்  தானாகவே இருக்கிறான்.  வெற்றியையும் தானே அனுபவிக்கின்றான்.  தோல்வியையும் தானே அனுபவிக்கிறான்.  வெற்றியையும் தோல்வியையும் ஒருவனேதான் அனுபவிக்கிறான்.

தானே அனுபவிக்கும் வெற்றியும் தோல்வியும் தன்னிலிருந்தேதான் வெளியாகிறது. இதை இயக்கி வருவது ஒரு சக்தியாகவே உள்ளது.  இந்தச் சக்தியே (குத்ரத்) என்னும் சக்தியாகும்.  தன்னிலிருக்கும் சக்தியை இவ்வழியில் அறிதலும் தன்னையறிதலாகும்.  இவ்வழியில் தன்னையறிந்து தன்னில் விளையாடும் குத்ரத்தையறிபவன் (காதிர்  ஆகிய  ஹக்கையறிகிறான் என்பது. இவ்வகையில் தன்னையறிதல் தன்னில் வேறுவேறாக இயங்கும் செயல்களிலிருந்து தன்னையறிதலும் இதனுக்கு உதாரணங்களாகக்கொள்ளலாம்.  வேறு பல உண்டு.  நிற்க.

தன்னுடலைத் தான் ஆராயும் போது இது பல்வகைத் தாதுப் பொருட்களையும் பஞ்சபூதங்களையும் தன்னகத்தேயடக்கிக் கொண்ட ஒரு பிண்டமாயுள்ளது. அனைத்துலகும் பஞ்சபூதம் கொண்டவுருவமாகும்.  எனவே பஞ்ச பூதத்தாலான நாம் என்பதனை நன்கறிந்தோ மாயின்பஞ்ச பூதமனைத்தையும் ஒன்றாயடக்கிக் கொண்ட ஹக்கு நம்மில் மறைந்துறை கின்றது என்பது நன்குதெளிவாகும்.  எனவே ஹக்கு நம்மில் மறைந்துள்ளமையால் பொது மக்கள் ஞான அடிப்படையறிவு அற்றோர் அறிதல் இயலாததாம்.  எனவே, ஹக்கு நம்மில் எவ்வண்ணம் விரவிக் கலந்துள்ளதோஅவ்வண்ணமே அனைத்திலும் ஹக்குக் கலந்துள்ளது. எனவே, பிரிவற்ற, மாற்றமற்ற முழுமுதலாய் அமைந்து தசையில் இரத்தம் கலந்துளவாறு, இலையிற் பசுமைகலந்துளவாறு, சூரியனில் ஒளி கலந்துளவாறு  பிரித்தற்கியலாது பேதமற்று விளங்குவதே  ஹக்கான ஹக்காகும். ஆத்மீகத் துறையில், நாம் நுழையும்போது நேரே ஹக்கின் சிறப்புகளைக் கண்டு கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இன்ஸானின் நிலை எவ்வாறு இருந்தது? பின்பு இன்ஸான்எனும் பெயர் எப்படி வந்தது? இதில் ஆராய்ச்சி செய்யவேண்டும்.  நம் உருவம் அனைத்தும் படைப்புகள் எனக் கூறப்படும்யாவும் கண்ணுக்குத் தென்படும் தோற்றமேயல்லாது வேறொன்றல்ல. அகக்கண்ணைக் கொண்டு  நாம் இதனைப் பார்ப்போ மாயின் உண்மை விளங்கும்.

நாம் என்றிருந்தும் மரிக்க வேண்டியவர்களே, இறந்ததன் பின்நித்திய உலகாகிய ஆத்ம உலகின் ஜீவியம்  தொடங்கிவிடும்.  அதுவே உண்மையான உலகமாகும்.  இவ்வுலகம் சற்றுச் சாந்திக்காக வெளியானதாகும்.  ஆரம்பம் சூனியமாக இருந்தது.  அதாவது குறிப்பற்ற புலப்படாத ஒன்றாயிருந்தது.  அப்போது எவ்வகையான உருவமோ படைப்புகளோ இருக்கவில்லை.  அணுக்களோ (Atom) அவற்றின் அசைவோ இருக்கவில்லை.  விளக்கமற்ற நிலையிலிருந்தது.  (இதுவே இன்றைய என் நிலையாகும்) இந் நிலையிலிருந்துஹக்குத் தன்னை வெளியிட நினைத்து அணுக்கள் போன்ற உருவமெய்தி அசைவு (சலனம்) கொண்டது.  நுண்ணனுக்கள் பேரணுக்களாய் பஞ்சபூதமெனும் உருக்கொண்டு அவற்றில் நாம் இன்றை உருவெய்தினோம்.  இதுவே இன்று நாம் மானிட ரூபம் கொண்டும் மாக்கள்ரூபம் கொண்டும் மரம் முதலாம் அனைத்துயிர் கொண்டும் பிறங்குகின்றோம். இவ்வண்ணம் நம்நிலையை நாம் அறிந்து இவ் ஞானம் பெற்றோம் எனின் இதனையே தன்னைத்தான் அறிதல் என்போம்.  மேலும் எழுதின் இன்னும் நீளும். ஆதலால்  விடுத்தோம். ஹக்கு உங்களுக்கு நல்ல ஞானத்தை யருளுமாக. ஹக்கு உங்கள் நிலைமைகளைச் சீராக்குமாக. சந்தோ­மாகவிருங்கள்.  அனைவருக்கும் நம் ஸலாம்.  தேவைகளுக்கு எழுதுங்கள்

 

பிறங்குகின்றோம்:

 

பிரகாசிக்கின்றோம்

 

தகவல்:  எஸ்.பி. ஆரிப் எம்ஏ. திருச்சி

 

\