ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012  »  Apr 2012   » மனங்களை வென்ற மாதவர்

மனங்களை வென்ற மாதவர்


இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்தியா என்றால் நினைவுக்கு வருவது அஜ்மீர் ­ஷரீபைத்தான்!  தமிழகம் என்றால் நினைவுக்கு வருவது நாகூர் ஷ­ரீபைத்தான்! “வாழ்நாளில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று ஜியாரத் செய்துவருவோம்” என அவர்கள் ஆசைப்படுவதும் இந்த இரு இடங்களைத்தான்!

இவ்விரு நாதர்களும் அப்படி என்ன சாதித்திருந்தார்கள்? முஹம்மது  காசிமைப்போல சிந்து மீது படையயடுத்து வென்றார்களா?அவ்ரங்கஜீப்பைப் போல இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆண்டார்களா?அக்பர், ஷாஜஹான்,  ஷேர்ஷாவைப் போல பலபகுதிகளை வென்றார்களா?.  இல்லை.  இவர்கள் நிலங்களை வெல்லவில்லை.  மக்களின் மனங்களை வென்றார்கள்.  இவர்கள் மக்களின் உடல்கள் மீது ஆட்சி செலுத்தவில்லை.  மனங்களின் மீது - ஆத்மாக்கள் மீது ஆட்சி செய்தார்கள்.

அதனால்தான் புற ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களை மக்கள் மறந்தாலும்அக ஆட்சி செய்யும் இவர்களை யாரும் மறக்கவில்லை - மறக்கப்போவதுமில்லை.

குணங்குடி மஸ்தான் சாஹிப் (ரஹ்)அவர்கள் நாகூர் நாதரை வியந்து ......

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து ஜெய ஜெயா வென்பர் கோடி

எனப் போற்றிப் பாடுவதுபோல மன்னாதி மன்னர்களெல்லாம் அவர்களின் மனம்பணிந்து தரிசித்தார்கள்.

ஆண்டுதோறும்  பல்லாயிரக்கணக்கானமக்கள் அவர்களைப் பார்ப்பதற்காக - அவர்களைத் தங்கள் கண்களால் காண முடியாவிட்டாலும் அவர்களின் அருள் பார்வை தங்கள் மீது  பட்டுவிடவேண்டுமென நாடி வந்து தரிசிக்கிறார்கள்.

தங்கள் தேவைகள் நிறைவேற அரசாங்கத்திற்கு மகஜர் கொடுப்பதுபோல,  அரசும் மற்றவர்களும் தீர்த்து வைக்கமுடியாத கோரிக்கைகளை மனம் எனும் விண்ணப்பத் தாளில் கண்ணீர் எனும் மையால் எழுதி மகஜர்போடுகிறார்கள்.

என்ன ஆச்சர்யம்!

அவர்களின் கோரிக்கைகளெல்லாம் நிறைவேற்றப்பட்டு மகிழ்ச்சியோடு திரும்புகிறார்கள்.
பணக்காரர்,ஏழை, முஸ்லிம், முஸ்லிம்அல்லாதார், ஆண்கள், பெண்கள், இந்தியர், அன்னியர், என எந்தப்பாகுபாடு மின்றி அவர்களின் தர்பார் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அவர்களைப்பற்றி பாடாத புலவர்கள் இல்லை.அவர்களைப் புகழாத ஏடுகள் இல்லை. அவர்களை மதிக்காத மனங்களில்லை. அவர்களின் சன்னிதானத்தில் நிற்கும்போது அல்லாஹ்வின் ஆற்றல் உணரப்படுகிறது.

அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணை கண்களில்நிழலாடுகிறது. இஸ்லாத்தின் மாண்பு மனங்களில் பதிகிறது. சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் பாடுவதை வழிமொழிந்து நம் நாவும் பாடுகிறது. ( யா ஸாஹிபன் னாஹூரீ குன்லீ நாஸிரீ...... )

“நாகூர் வாழும் எஜமானே! எனது கேள்விப் புலனும், பார்வைப் புலனும்உறுப்புகளும் ஸலாமத்தாக இருக்க எனக்கு நல்லருள் செய்வீர்களாக! இன்னும் நான் குறைந்தஅற்பாயுள் வயதுடைவனாக இல்லாமல் நீடித்த வாணாள் உடையவனாயிருக்க நீங்கள் நல்லுதவி செய்தருள்வீர்களாக!எல்லாவித நன்மைகளும் ஒருங்கே சேகரமாய் பொதிந்து அமைந்த அப்துல் காதிரு வொலி அவர்களே!”